தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2–வது நாளாக ரசாயனங்கள் அகற்றும் பணி 260 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2–வது நாளாக ரசாயனங்கள் அகற்றும் பணி நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2–வது நாளாக ரசாயனங்கள் அகற்றும் பணி நடந்தது. இதுவரை அந்த ஆலையில் இருந்து 260 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதால், போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். இதைத் தொடர்ந்து மே மாதம் 28–ந் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. உடனடியாக ஆலை மூடி ‘சீல்‘ வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த ஒரு கந்தக அமிலம் கண்டெய்னரில் சிறிய கசிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதில் இருந்த 2 ஆயிரத்து 124 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. பின்னர் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதற்காக தமிழக அரசு உயர்மட்டக்குழுவை அமைத்தது. இந்த குழு ஆலையில் தீவிர ஆய்வு மேற்கொண்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் அகற்ற அரசு உத்தரவிட்டது.
2–வது நாளாக...இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணி நேற்று 2–வது நாளாக நடந்தது. நேற்று மட்டும் 7 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இதுவரை மொத்தம் 13 டேங்கர் லாரிகள் மூலம் 260 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
இதுதவிர பாஸ்பாரிக் அமிலம் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு இருந்ததால் அதில் படிமங்கள் உருவாகி இருந்தன. இதை சரி செய்யும் வகையில் அமிலத்தை கலக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டு, மோட்டார் மூலம் பம்பிங் செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. வரும் நாட்களில் பாஸ்பாரிக் அமிலம் மற்றும் இதர ரசாயனங்களையும் அகற்றும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.