விவசாயிகள் பாதிக்கப்படுவதால் 8 வழி பசுமை சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்


விவசாயிகள் பாதிக்கப்படுவதால் 8 வழி பசுமை சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 4 July 2018 4:15 AM IST (Updated: 4 July 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பாதிக்கப்படுவதால் 8 வழி பசுமை சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்-சென்னை இடையே பசுமை சாலை அமைக்க நில அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டன. தற்போது எல்லைக்கற்களுக்கு இடையே உள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணியும், மரங்கள், கிணறுகள், வீடுகள் ஆகியவற்றை கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் குப்பனூர், சீரிக்காடு, வெள்ளியம்பட்டி, பருத்திக்காடு, ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், 8 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படும் இடங்களை பார்வையிட்டார். குப்பனூர், சீரிக்காடு பகுதிகளுக்கு சென்ற போது, அவரிடம் விவசாயிகள் எங்களுக்கு 8 வழி சாலை வேண்டாம், விவசாய நிலம் தான் வேண்டும் என்று அழுதுக்கொண்ட கூறினார்கள். இதன் பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சந்திக்கவும், திட்டத்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அறியவும் வந்துள்ளோம். இந்த திட்டத்தால் பெரிய விளைநிலங்கள் அழியும் நிலை இங்கு உள்ளது. அனைத்து விவசாயிகளும் நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசு மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே 3 சாலைகள் உள்ளன. ஏன் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு செய்ய உள்ளது?. ஏற்கனவே உள்ள சாலைகளை சீரமைத்து பராமரிக்கலாம். விவசாயிகள் பாதிக்கப்படுவதால் 8 வழி பசுமை சாலை திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் கட்சியுடனும், அமைப்புகளுடனும் இணைந்து சட்டரீதியாக போராட்டத்தை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் குழந்தைவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநில மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அனைத்திந்திய மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் நிலுவையில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளை விசாரிக்க மாவட்டங்கள் தோறும் சிறப்பு கோர்ட்டு அமைக்க வேண்டும், இணையதள வன்முறைகளை தடுத்திட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், சாதிய ஆணவ கொலைகளை தடுத்திட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், குழந்தை திருமணங்களை தடுத்திட தனிப்பிரிவை தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வரவேற்புக்குழு தலைவர் வெங்கடபதி மற்றும் நிர்வாகிகள் குழந்தைவேலு, உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story