ரெயில்வே மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு


ரெயில்வே மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 July 2018 5:15 AM IST (Updated: 4 July 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

கோவை,

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் சாலையில் ரூ.29 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலை துறையினர் அரசிற்கு திட்ட அறிக்கை அனுப்பினர். இந்த மேம்பால பணிக்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரி மையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

என்.ஜி.ஜி.ஓ. காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் சாலை 60 அடி அகலம் கொண்டது. தற்போது ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக இந்த சாலையின் இருபுறமும் தலா 14 அடி அளவுக்கு நிலம் எடுக்கப்போவதாக தெரிவித்து உள்ளனர். இதனால் இங்கு வசிக்கும் 60 குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும் இங்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் சார்பில் ஏராளமான ஏழை குழந்தைகள் பராமரிக்கப் பட்டு வருகின்றனர். அவர்களின் இடமும் எடுக்கப்பட்டால் ஏழை குழந்தைகளை எவ்வாறு பராமரிப் பது என்று தெரியவில்லை. கோவையில் பல்வேறு இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படாமல் ரெயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.

தற்போது ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் குறைந்த அளவே போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. துடியலூரில் இருந்து சரவணம்பட்டி வழியாக சத்தி செல்லும் சாலையில் தான் போக்குவரத்து அதிகளவு பாதிக்கப்படுகிறது. எனவே அங்கு நீங்கள் மேம்பாலம் கட்டலாம்.

இதே இடத்தில்தான் நீங்கள் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்றால் நிலத்தை கையகப் படுத்தாமல் தற்போது உள்ள 60 அடி அகல சாலையில் கட்டலாம். எனவே பொதுமக்களை பாதிக்கும் வகையில் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story