தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வரும் நெற்பயிர்கள்
விருத்தாசலம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் நெய்பயிர்கள் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ காலத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. பெய்த மழைநீர் குளம், ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஏரி, குளங்களில் தேக்கி வைத்திருந்த நீர் வேகமாக குறைந்தது.
இருப்பினும் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், நிலத்தடி நீரை கொண்டும், கோடை கால மழையை நம்பியும் குறுவை சாகுபடி செய்ய முடிவு செய்தனர். அதன்படி 7 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். ஆரம்பத்தில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன. ஆனால் கோடை மழை பெய்யவில்லை. மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நிலத்தடிநீர் மட்டமும் குறைந்தது. இதன்காரணமாக நெற்பயிருக்கு போதிய தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, குமராட்சி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆனால் விருத்தாசலம் பகுதியில் மழை பெய்யவில்லை. மழையை எதிர்பார்த்து பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாலும், அடிக்கடி மின்தடையாலும் ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டாரை இயக்கி நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் விருத்தாசலம் நாச்சியார்பேட்டை, சித்தலூர், ஆலிச்சிக்குடி, சாத்துக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி உள்ளன. பல இடங்களில் நெற்பயிர்கள் கருகி வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறையால் நெற்பயிர்கள் கருகி உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story