காரியாபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
காரியாபட்டியில் ஆக்கிரமிப்பால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டி,
காரியாபட்டியில் கடந்த சில தினங்களாகவே மாலை வேளையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் காரியாபட்டி மெயின் ரோடு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே மழை நீர் தேங்கி பள்ளிக்குள் புகுந்தது. அடிக்கடி மழைநீர் பள்ளிக்குள் சென்று விடுவதால் பள்ளி மாணவிகள் பெறும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பள்ளிக்கு அருகில் உள்ள பாலத்தையும், வாறுகாலையும் அகலப்படுத்தினால் தான் மழை நீர் பள்ளிக்குள் செல்லாமல் தடுக்க முடியும். மேலும் காரியாபட்டி பள்ளத்துப்பட்டியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தவித்தனர். வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை இறைத்த வண்ணம் இருந்தனர்.
பள்ளத்துப்பட்டியில் இருந்து கரிசல்குளம் கண்மாய்க்கு என்.ஜி.ஓ.நகர் வழியாக கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ஆக்கிரமித்து மூடப்பட்டு விட்டதால் மழை நீர் கால்வாயில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சம்பந்தப்பட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story