ஓட்டேரியில் மேற்கூரை இல்லாமல் காணப்படும் பயணிகள் நிழற்குடை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை இல்லாத நிழற்குடையால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ். புரம் பகுதியில் சரவணா தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்ளது.
பெசன்ட் நகர், சைதாபேட்டை, தியாகராய நகர், பாரிமுனை, சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் வரும் 50-க்கும் அதிகமான பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
மேலும் இங்கிருந்து பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்லவும் இப்பகுதி மக்கள் இந்த பஸ் நிறுத்ததை பயன்படுத்தி வருகிறார்கள்.
மேற்கூரை இல்லை
இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை மேற்கூரை இல்லாமல் காட்சி அளிக்கிறது.
இதனால் பயணிகள் பஸ்சுக் காக சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை உருவானது. ஆனால் தற்போது கோடை வெயில் முடிந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. பஸ்சுக்காக காத்திருக்கும்போது மழை பெய்தால் ஒதுங்க இடம் இல்லாமல் பயணிகள் பரிதவிக்கின்றனர்.
வெயில் காலத்தில் கூட நிழற்குடை இல்லாமல் வெயிலை சமாளித்து நாங்கள் பஸ்சுக்காக காத்திருந்து சென்றோம். ஆனால் மழை காலத்தில் இது எப்படி சாத்தியமாகும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
மழை, வெயிலில் அவதி
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த பஸ் நிறுத்தத்தின் அவல நிலையை புகைப்படம் எடுத்து, சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கொடுத்து புகார் அளித்தபோதும் எந்தவித பயனும் இல்லை.
இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், தனியார் நிறுவன விளம்பரத்திற்காக காத்திருப்பதாகவும், அவர்கள் விளம்பர பலகை வைத்து அதன்மூலம் நிழற்குடை அமைத்து தருவார்கள் என்றும் அலட்சியமாக பதில் சொல்கின்றனர்.
இந்த பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் ஓடுவதோடு, குப்பை தொட்டிகளும் இருப்பதால் நிழற்குடை அமைந்துள்ள பகுதியை தவிர வேறு எங்கும் நிற்க முடியாத நிலை உள்ளது. வேறு வழியின்றி நாங்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து அவதிப்பட்டு பஸ் ஏறி செல்கிறோம்.
எனவே சம்பந்தபட்ட உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடியாக நிழற் குடையை சீரமைத்து தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story