மாணவர் சமுதாய சுற்றுலா தலமாக பரிதிமாற் கலைஞரின் நினைவு இல்லம் மாற்றப்பட வேண்டும்


மாணவர் சமுதாய சுற்றுலா தலமாக பரிதிமாற் கலைஞரின் நினைவு இல்லம் மாற்றப்பட வேண்டும்
x
தினத்தந்தி 4 July 2018 5:11 AM IST (Updated: 4 July 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

பரிதிமாற் கலைஞரின் நினைவு இல்லம் மாணவர் சமுதாய சுற்றுலாதலமாக மாற்றப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

தமிழ் மொழியை செம்மொழியாக்க வேண்டும் என்று முதல் முதலில் குரல் கொடுத்தவர் சூரியநாராயண சாஸ்திரி இவர் தமிழ் மீது அளவில்லா பற்று கொண்டதால் வடமொழியில் இருந்த தனது பெயரை செம்மொழியில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றி கொண்டார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாச்சேரி என்ற கிராமத்தில் கோவிந்தசிவன், லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1870-ம் ஆண்டில் ஜூலை மாதம் 6-ந்தேதி பரிதிமாற் கலைஞர் பிறந்தார். இவரால் தமிழுக்கும், தமிழ் இலக்கணம், இலக்கியத்திற்கும் தனி பெருமை கிடைத்தது என்றால் மிகையாது.

1.ரூபாவதி, 2.கலாவதி 3.மானவிஜயம், 4.தனிப்பாசுரத் தொகை, 5.பாவலர் விருந்து முதல் நாள், 6.நாடகவியல், 7.மதிவாணன், 8. தமிழ் மொழியின் வரலாறு, 9.மணிய சிவனார் சரித்திரம் 10. சித்திரகவி விளக்கம்11. தமிழ் வியாசங்கள் 12. தமிழ் புலவர் சரித்திரம் 13. மாலா பஞ்சகம் ஆகிய நூல்களை எழுதி தமிழ் மொழி வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் மேலும் அவர் உயர்தனி செம்மொழி தமிழ் என்றும், வடமொழிக்கு முன்னே தமிழ் மொழி தான் பிறந்தது என்றும் உலகுக்கு வித்திட்டார்.

பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர் தனது 19 வயதில் முத்துலட்சுமியை மணந்தார். இவருக்கு ஆனந்தவல்லி, நடராசன் சுவாமிநாதன் ஆகிய 3 குழந்தைகள் பிறந்தன. தமிழுக்காக பல அரிய சாதனைகள் படைத்த பரிதிமாற் கலைஞர் 1903-ம் ஆண்டில் நவம்பர் மாதம் 2-ந் தேதி மறைந்தார். ஆனால் அவரது தமிழ் தொண்டு இந்த மண்ணை விட்டு ஒரு காலமும்மறையாது என்பது உறுதி இருக்கிறது.

மதுரை விளாச்சேரி அக்ஹாரம் தெருவில் உள்ள பரிதிமாற் கலைஞரின் வீடு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு நினைவு இல்லமாக போற்றப்பட்டு வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு இல்லத்தை உருவாக்கியதோடு, அதைநேரடியாக திறந்து வைத்து பரிதிமாற் கலைஞருக்கு புகழ் சூட்டினார்.

இந்தநிலையில் பரிதிமாற் கலைஞரின் நினைவு இல்லம் சில நாட்கள் திறந்தும், பல நாட்கள் மூடப்பட்டும் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அவர் எழுதிய 13 புத்தகங்களில், நினைவு இல்லத்தில் ஒரு சில புத்தகங்கள் தான் உள்ளன. அதுவும் அதை எடுத்து படிக்க முடியாத நிலையில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டமும் நினைவு நாள் அனுஷ்டிப்பும் மட்டுமே இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பரிதிமாற் கலைஞரின் நினைவு இல்லத்தை தமிழ் சுற்றுலாதலம், தமிழ்ஆராய்ச்சி மையமாக போற்றப்பட்டு, தமிழறிஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் சமுதாய சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் பரிதிமாற் கலைஞருக்கும், அவர் முதன் முதலாக குரல் ஒலித்த செம்மொழிக்கும் நாம் செய்யும் உயிரோட்டமான மரியாதையாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பரிதிமாற் கலைஞரின் 148-வது பிறந்த நாள் வருகிற 6-ந்தேதி அவரது நினைவு இல்லத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் மாணவர்கள் சமுதாயத்திற்கான தமிழ் சுற்றுலாதலமாக உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

Next Story