குழாயில் கழிவுநீர், சாலையில் குடிநீர் மாநகராட்சியின் அவலம்
மதுரை கோகலே சாலை மற்றும் புதூரில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் பெத்தானியபுரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் குழாயில் கழிவு நீர் வருவதாக குற்றம் சாட்டினர்.
மதுரை,
மதுரை புதூர் மாநகராட்சி வார்டு அலுவலகம் எதிரே உள்ள ராட்ச குடிநீர் குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் குடிநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது. இந்த நீர் வாய்க்காலில் செல்ல வழி இல்லாததால், சாலையிலே தேங்கி நின்றது. இதனால் வாகனங்களில் வந்தவர்கள் இந்த பகுதியில் இவ்வளவு மழை பெய்து இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் கேட்டு சென்றனர்.
இந்த குழாயில் வரும் நீரை நிறுத்துவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் கோகலே சாலையில் உள்ள குழாய் வால்வை அடைத்து உள்ளனர். ஆனால் அந்த வால்வு பயன்படுத்தி பல ஆண்டுகள் ஆகி இருந்ததால், அதனை திறக்கும் போதும் அங்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் மாநகராட்சி ஊழியர்கள் இந்த அடைப்பை சரி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுத்தனர். இதனால் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு குறைந்தது.
சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மதுரை புதூர் கணேசபுரத்தில் வைகை முதல் கட்ட குடிநீர் திட்டத்தில் கட்டப்பட்ட குடிநீர் மேல் நிலை தொட்டி உள்ளது. இதன் கொள்ளளவு 16 லட்சம் லிட்டர் ஆகும். இதில் பல ஆண்டுகளாக தண்ணீர் ஏற்றப்பட வில்லை. தற்போது அந்த பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவதற்காக அந்த மேல்நிலையில் தொட்டியில் குடிநீர் ஏற்ற நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்து குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாலையில் குடிநீர் ஒரு பக்கம் செல்ல, குழாயில் குடிநீருக்கு பதில் கழிவு நீர் வருவதாக பொதுமக்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். மண்டலம்-1 அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடந்தது. துணை ஆணையாளர் மணிவண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது பெத்தானியபுரம் ஜீவா தெரு, காந்தி தெரு பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் குழாயில் கழிவு நீர் தான் வருகிறது. எங்களால் இந்த நீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே மறியல் செய்ய வந்து சாலையில் அமர்ந்தால், உடனே அதிகாரிகள் அந்த நேரத்தில் குடிநீர் லாரியை அனுப்பி தண்ணீர் வினியோகம் செய்கின்றனர். இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே எங்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story