முதல்- அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவனுக்கு அறிவுரை


முதல்- அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவனுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 4 July 2018 5:39 AM IST (Updated: 4 July 2018 5:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்- அமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவனுக்கு அறிவுரை வழங்கியதுடன், அவனுடைய பெற்றோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் எச்சரிக்கையும் விடுத்தார்.

ஈரோடு, 

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மதியம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை. பின்னர் அது வெறும் புரளி என்று தெரியவந்தது.

போனில் பேசி புரளியை ஏற்படுத்திய குரல் ஒரு சிறுவனின் குரலாக தோன்றியது. எனவே அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அது ஈரோடு மாவட்டம் கோபி அருகே காசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் எண்ணில் இருந்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள் ஈரோடு மாவட்ட போலீஸ் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் உத்தரவின் பேரில் கோபி மற்றும் கடத்தூர் போலீஸ் நிலைய போலீசார் காசிபாளையம் பகுதியில் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது காசிபாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் வெடிகுண்டு புரளியை கிளப்பியது தெரியவந்தது. அந்த சிறுவன் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இதையடுத்து அந்த சிறுவன் மற்றும் பெற்றோரை நேற்று முன்தினம் இரவே போலீசார் கண்டுபிடித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

அப்போது அந்த சிறுவன் சினிமாக்களில் 100 என்ற எண்ணுக்கு அழைத்து புரளியை ஏற்படுத்துவதுபோன்ற காட்சிகளை பார்த்து விளையாட்டாக செய்ததாக கூறினான். ஏற்கனவே பொது தொலைபேசியில் இருந்து 100 என்ற எண்ணுக்கு போன் செய்து காசிபாளையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக புரளி கிளப்பி இருக்கிறான். ஆனால் அதில் அது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அந்த தைரியத்தில் நேற்று முன்தினம், அவனுடைய தாயாரின் செல்போனில் இருந்து விளையாட்டாக பேசி இருக்கிறான். அது சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு சென்றது. தற்போது வசமாக மாட்டிக்கொண்டான். இந்த சிறுவன் 4 வயது சிறுவனாக இருந்தபோதே ‘ஸ்பைடர் மேன்’ என்று கூறிக்கொண்டு வீட்டு மாடியில் இருந்து குதித்து காயம் அடைந்து இருக்கிறான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமாக்களை பார்த்து அதில் வரும் சாகசங்களை செய்ய வேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி சிக்கி வரும் அந்த சிறுவனின் பெற்றோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அந்த சிறுவனுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் கூறும்போது, ‘தற்போது ஸ்மார்ட் போன்கள் இல்லாத வீடுகள் குறைவு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கேட்கிறார்கள் என்று செல்போன்களை கொடுத்து விட்டு தொல்லையில்லாமல் இருக்க நினைக்கிறார்கள். குழந்தைகளிடம் செல்போன்கள் கொடுப்பவர்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். எதை பார்க்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அந்த கட்டுப்பாடு இல்லாததால் அந்த சிறுவன் சிக்கிக்கொண்டான். எனவே பெற்றோர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Next Story