பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் கலக்கும் சாயக்கழிவுநீர்
ஈரோட்டில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஜவுளி உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜவுளி உற்பத்திக்காக ஈரோடு மாநகர் பகுதியில் சாய, சலவை, பிரிண்டிங் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டறைகளில் உள்ள கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என்றும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்தி மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்காக அனைத்து பட்டறைகளிலும் பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு சாய, சலவை பட்டறைகளில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆறு, வாய்க்கால்கள், ஓடைகள், சாக்கடைகளில் நேரடியாக வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது எனவே சாயக்கழிவுநீரை வெளியேற்றும் பட்டறைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதன்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தாலும், சாயக்கழிவு கலக்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இரவு நேரங்களில் ஓடைகள், வாய்க்கால்களில் சாயக்கழிவுநீர் கலப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, காலிங்கராயன் வாய்க்கால் ஆகிய நீர்நிலைகளில் சாயக்கழிவுநீர் அதிகமாக கலக்கப்படுகிறது.
பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் நேற்று காலை சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலிங்கராயன் வாய்க்காலை ஓடை கடக்கும் இடத்தில் சாயக்கழிவுநீர் நுரையாக விழுகிறது. இந்த கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் சென்று கலப்பதால், ஆற்றுநீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story