தினம் ஒரு தகவல் : பெண்களுக்கான இணைய தளம்


தினம் ஒரு தகவல் : பெண்களுக்கான இணைய தளம்
x
தினத்தந்தி 4 July 2018 10:53 AM IST (Updated: 4 July 2018 10:53 AM IST)
t-max-icont-min-icon

இந்தியப் பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த செய்வதற்காக ‘கூகுள் இந்தியா’ என்ற தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கூகுள் இந்தியா இணைய தளம் மூலமாக, பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடுத்த 5 ஆண்டுக்குள் இணையத்தை பயன்படுத்தும் இந்தியப் பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் இருப்பது போல இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா 2-வது இடத்திற்கு வர உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தை தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு 2-வது இடத்திலும் உள்ளது.

இந்த நிலையில் ‘கூகுள் இந்தியா’ இந்தியாவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு இணைய தளத்தை அமைத்துள்ளது. hwgo.com (ஹெல்பிங் உமன் கெட் ஆன் லைன்) எனும் முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம், இணைய பயன்பாட்டின் அடிப்படை பற்றி பெண்களுக்கு வழி காட்டுகிறது. இணையத்தை எளிதாக அறிமுகம் செய்யும் வகையில் அதை பயன்படுத்த தேவையான அடிப்படை விஷயங்களை முகப்பு பக்கத்திலேயே கொடுத்துள்ளது.

கம்ப்யூட்டர் அடிப்படையில் தொடங்கி, இணைய அடிப்படை, இ-மெயில், வீடியோ சேவை ஆகியவற்றை எளிமையாக இந்த பகுதி விளக்குகிறது. இணையத்தில் பெண்களுக்கு பயன்படக்கூடிய விஷயங்களையும் வீடியோ விளக்கத்துடன் அளித்துள்ளது. இணையத்தை பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று வழி காட்டும் இந்த தளத்தில், இணையத்தை பயன்படுத்தி பயன் அடைந்த பெண்களின் அனுபவமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைய பயன்பாடு என்பது சகஜமாக கருதப்பட்டாலும் கூட, இதுவரை இணையத்தை பயன்படுத்தியிராத பெண்களை இணையம் அருகே கொண்டு வரும் முயற்சியாக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story