வீரத் துறவி விவேகானந்தர்


வீரத் துறவி விவேகானந்தர்
x
தினத்தந்தி 4 July 2018 11:34 AM IST (Updated: 4 July 2018 11:34 AM IST)
t-max-icont-min-icon

இன்று (ஜூலை 4-ந்தேதி) விவேகானந்தரின் நினைவு நாள்.

உலக அளவில் இந்தியாவுக்கு புகழ் சேர்த்துக்கொடுத்த ஞான தீபம் சுவாமி விவேகானந்தர். நாம் விழிப்போடு இருக்க தூங்காமல் கண் விழித்த தூண்டா மணி விளக்கு. நம் உறக்கத்தை கலைத்து விழி, எழு, உன் லட்சியத்தை அடையும் வரை விடாமல் போராடு என தட்டிக்கொடுத்த வீரத் துறவி.

‘இவனை நம்பு, அவனை நம்பு என்று மக்கள் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன், முதலில் உன்னை நம்பு’ என்று வாழ்ந்தார். 39 ஆண்டுகளே வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் நம்மை பற்றியும் நம் நாட்டின் வருங்கால செழுமை பற்றியும் தான் அதிகம் சிந்தித்து இருக்கிறார்.

நம் நாடு பெற்ற பெரும் செல்வம் அவர். வற்றாத ஜீவநதியாய் சிந்தனைகளை உலகெங்கும் விதைத்த சொல் ஏர் உழவர். விவேகானந்தரின் எழுத்துக்களை படித்தால் போதும் உற்சாகம் ஊற்றெடுக்கும். தன்னம்பிக்கை சிறகு விரிக்கும். ஒரு வேகம், விறுவிறுப்பு, சுறுசுறுப்பு நாடி நரம்புகளில், ரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நம்மிடம் தேங்கி நிற்கும் தயக்கமும், மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் 12-1-1863 அன்று விஸ்வநாத தத்தருக்கும் புவனேஸ்வரி அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் வீரேஸ்வரன் நரேந்திரன். பிறகு சுவாமி தமக்கு வைத்துக்கொண்ட பெயர் சச்சிதானந்தா. சிகாக்கோ பயணமாகிறபோது அவர் சூடிக்கொண்ட பெயர்தான் இன்று வையகமே போற்றுகின்ற விவேகானந்தர் என்கிற திருநாமம்.

1893-ம் ஆண்டு சிகாகோ நகரில் கொலம்பியன் கண்காட்சி அரங்கில் சர்வ மத மகா சபையில், அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே என்று சுவாமி உரை ஆற்றியது உலகம் எங்கும் அவருக்கும் நமது தேசத்திற்கும் அளவற்ற பெருமையை கொண்டுவந்து சேர்த்தது.

எது நாட்டுப்பற்று? என்று சுவாமியை கேட்டபோது நாட்டு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற பேரார்வம்தான் நாட்டுப்பற்று என்றார். ‘கடவுளைக் காணவேண்டுமானால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியால் பரிதவிக்கின்ற லட்சோபலட்சம் தரித்திர நாராயணருக்கு சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான நாட்டுப்பற்று’ என்கிற விவேகானந்தரின் பேராண்மை மிக்க சொற்கள் தான் வெளிநாட்டு பக்தை நிவேதிதாவை தொண்டு செய்யத் தூண்டியது.

முதல் அயல்நாட்டு பயணத்தின்போது அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சுற்றுப்பயணமும் சொற்பொழிவுகளையும் மேற்கொண்ட விவேகானந்தர் ஒரு புதிய விடியலுக்கான விதைகளை மேலைநாடுகளில் விதைத்த இந்திய வீரத்துறவி ஆவார். 1893 முதல் 1896-ம் ஆண்டு வரை மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப்பயணத்தில் வேதாந்த, சித்தாந்த, சமூக மேம்பாட்டுக்கான முழக்கங்களை முன்வைத்தார்.

1897-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா திரும்பிய விவேகானந்தர், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிறகு, 1899-ம் ஆண்டு மீண்டும் மேலை நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். 1900-ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் வேதாந்த நிலையத்தையும் நிறுவினார்.

‘பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முதல்படி அவற்றை எதிர்கொள்வதே’ என்பது அவர் வாக்கு. ஒருமுறை விவேகானந்தர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டவர் ஒருவர், ‘உங்கள் நாட்டுக்கும் எங்கள் நாட்டுக்கும் நீங்கள் கண்ட வித்தியாசம் என்ன?’ என்று கேட்டார். அதற்கு குடும்ப வாழ்க்கையில் உள்ள ஒழுக்கம்தான் வித்தியாசம் என்றார் விவேகானந்தர்.

எப்படி? என்றார் அயல்நாட்டார். ‘உங்களது நாட்டில் தாயைத் தவிர பல பெண்களை தாரமாக நினைக்கிறார்கள். எங்கள் நாட்டிலோ தாரத்தைத் தவிர மற்ற பெண்களை தாயாக நினைத்து வணங்குகிறார்கள்’ என்றாராம் விவேகானந்தர்.

‘இல்லை என்றும் இயலாது என்றும் ஒரு போதும் சொல்லாதே! எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய திறமை உன்னிடம் இருக்கிறது. உன்னை பலவீனன் என்று ஒருபோதும் நினைக்காதே! தெய்வங்களிடம் நம்பிக்கை வைப்பதைவிட உன்னிடத்தில் நம்பிக்கை வை! வெற்றிதேவதை உன் வாசல் கதவை தட்டுவாள்’ என்கிற விவேகானந்தரின் வீரமிக்க சொற்களைக் கேட்டபின்பும் ஒருவனுக்கு நம்பிக்கை உதயம் ஆகாமலாபோகும்...?

சுவாமி விவேகானந்தரின் கம்பீரத்தில் மனதை பறிகொடுத்த ஒரு மேலை நாட்டுப்பெண் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். சுவாமி அந்த பெண்ணிடம் கேட்கிறார், ‘ஏனம்மா இந்த ஆசை என்று? தங்களைப்போல் அறிவாளியான குழந்தை எனக்கு வேண்டும் என்பதற்காக உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்’ என அந்த பெண் சொன்னபோது, ‘ஏன் அம்மணி அறிவாளியான மகன் தானே வேண்டும்? என்னைத் தங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே’ என்று மென்மையாக எடுத்துக் கூறியபோது அந்த அயல்நாட்டுப் பெண்மணி அதிசயித்து நின்றார்.

அவரது தேசபக்திக்கு ஒரு உன்னதமான சான்றைப் பார்க்கலாம். அயல்நாட்டு பயணத்திலிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து வருகிறார். பாம்பன் கடற்கரையில் கால் பதித்ததும் சுவாமி மண்ணில் நமஸ்கரிக்கிறார். சிறிதளவு மண்ணை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறார். மீண்டும் சிறிதளவு மண்ணை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார்.

அப்போது சுவாமியிடம் ஒருவர் இது ஏன் சுவாமி என வினவ, ‘கடந்த 4 ஆண்டுகளாக நான் மேலை நாடுகளில் சுற்றித்திரிந்து வருகிறேன். அவை எல்லாம் போக பூமி பாரதம் மட்டுமே புண்ணிய பூமி, யோகபூமி, என்னையறியாமல் ஏதேனும் போகத்தின் சாயல் என் உள்ளத்திலோ உடலிலோ பதிந்திருக்கலாம். இந்த புண்ணிய பாரத பூமியின் மண்ணை உட்கொண்டும் உடலில் பூசியும் அத்தகைய போகத்தின் சாயலை நான் இப்போது போக்கிக்கொண்டேன்’ என்று பதில் அளித்திருக்கிறார் சுவாமி! என்னே அவரது தேசபக்தி!

என்றைக்கும் எப்போதும் இந்த மண்ணை ஒரு நொடிகூட மறக்காத அந்த மகா ஞானதீபம், அணையாத அறிவு ஜோதி, 1902-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நம்மை மறந்து விட்டு விண்ணில் கலந்து விட்டது. அது ஒரு சரித்திரம். ஆனால் நமக்கெல்லாம் அவர் என்றும் அணையாத ஞானதீபம் தான். அவர் எழுத்தும், பேச்சும் நமக்கு என்றும் வழிகாட்டும் மகாஞானதீபம் ஆகும்.

தேசபற்றும், தெய்வ பற்றும் மக்கள் பற்றும் நம்மை என்றும் பற்றியிருக்க வேண்டும் என்று விரும்பிய அந்த மகானுக்கு என்றைக்கும் நாம் நன்றியுள்ளவராக இருப்போம்.

- கவிஞர் ச.இலக்குமிபதி

Next Story