தேவாரம் வனப்பகுதியில் காட்டுயானையின் வழித்தடங்களை ஆய்வு செய்த கலெக்டர்


தேவாரம் வனப்பகுதியில் காட்டுயானையின் வழித்தடங்களை ஆய்வு செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 5 July 2018 3:15 AM IST (Updated: 4 July 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

தேவாரம் வனப்பகுதியில், காட்டு யானையின் வழித்தடங்களை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்

தேவாரம்.

தேவாரம் வனப்பகுதிகளான பெரும்பு வெட்டி, 18-ஆம் படி, சாக்குலூத்து, எள்ளுபாறை ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமின்றி விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் என இதுவரை 7 பேரை அந்த யானை கொன்றுள்ளது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

விளைநிலங்களுக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர். தேவாரம் பகுதியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானையின் நடவடிக்கையை துல்லியமாக கண்டறிந்து, அதனை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக, சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டைத் தடுப்பு காவலர்கள் 5 பேர் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வனப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். காட்டுயானை செல்லும் வழித்தடங்கள் குறித்த ஆய்வில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக யானையின் வழித்தடங்களை கண்டறிய வேண்டும். இதுமட்டுமின்றி மயக்க ஊசி செலுத்தும்போது சுமார் ஒரு கிலோ மீட்டர் முதல் 2 கிலோமீட்டர் தூரம் வரை யானை ஓடும். அப்போது, அதனை பின்தொடர்ந்து செல்வதற்கு வழித்தடங்களை தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

இதற்கான பணியில் தான் வேட்டைத்தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யானையின் வழித்தடங்கள் குறித்த அறிக்கை, தினமும் சென்னையில் உள்ள மாநில முதன்மை வன உயிரின பாதுகாவலருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேவாரம் வனப்பகுதிக்கு நேற்று வந்தார்.

எள்ளுபாறை வனப்பகுதிக்கு சென்ற கலெக்டர், காட்டுயானையின் வழித்தடங்களை ஆய்வு செய்தார். அப்போது தமிழக வனப்பகுதியில் இருந்து கேரள மாநில வனப்பகுதிக்கு செல்லும் தூரத்தை கேட்டறிந்தார். வேட்டைத்தடுப்பு காவலர்கள், 30 மீட்டர் தூரத்தில் காட்டுயானையை புகைப்படம் எடுத்ததாக கலெக்டரிடம் தெரிவித்தனர்.

மூங்கில், சந்தனம், தேக்கு ஆகிய மரங்கள் அதிகமாக இருப்பதால், அதன் கிளைகளை உட்கொள்ள யானை இங்கு வருவதாகவும், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் குடிப்பதற்கான வசதி இருப்பதாகவும் கலெக்டரிடம் வனத்துறையினர் தெரிவித்தனர். ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் கவுதம், உத்தமபாளையம் வனச்சரக அலுவலர் ஜீவனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில், கலெக்டர் பல்லவி பல்தேவ் விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர் பேசும்போது, காட்டுயானையை பிடிப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. யானை செல்லும் வழித்தடங்களை கண்டறிந்து, இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலை அடிவாரப்பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் வனத்துறை சார்பில் உயர்கோபுரம் அமைக்க இடம் கொடுக்க முன்வர வேண்டும். அப்போது தான் யானையின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க முடியும் என்றார்.



Next Story