துமகூரு அருகே கார்–லாரி மோதல் பெங்களூரு வாலிபர்கள் 5 பேர் உடல் நசுங்கி சாவு


துமகூரு அருகே கார்–லாரி மோதல் பெங்களூரு வாலிபர்கள் 5 பேர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 5 July 2018 3:30 AM IST (Updated: 5 July 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 5 வாலிபர்கள் உடல் நசுங்கி செத்தனர்.

பெங்களூரு,

துமகூரு அருகே காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 5 வாலிபர்கள் உடல் நசுங்கி செத்தனர். 5 பேரும் நண்பரின் திருமணத்தில் பங்கேற்க சென்ற போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

5 வாலிபர்கள் சாவு

துமகூரு மாவட்டம் மதுகிரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த நிலையில், திடீரென்று லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. லாரி மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இதனால் காரில் இருந்த 5 வாலிபர்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இதுபற்றி அறிந்ததும் மதுகிரி போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் பலியான 5 வாலிபர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பெங்களூருவை சேர்ந்தவர்கள்

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பெங்களூரு பையப்பனஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 24), தினேஷ் (24), ராம்மோகன் (23), ரிஷி (20), சீனிவாச பிரசாத் (25) ஆகியோர் என்று தெரிந்தது. இவர்கள் 5 பேரும் துமகூரு மாவட்டம் பாவகடாவில் நடந்த தங்களது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெங்களூருவில் இருந்து பாவகடாவுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.

மேலும் லாரி மற்றும் கார் டிரைவர்கள் கவனக்குறைவாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்து உள்ளது. இதுகுறித்து மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து பெங்களூரு மற்றும் துமகூருவில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story