கர்நாடக சட்டசபையில் 2018–19–ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் விவசாய கடன் தள்ளுபடி பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு


கர்நாடக சட்டசபையில் 2018–19–ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்  விவசாய கடன் தள்ளுபடி பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 5 July 2018 3:30 AM IST (Updated: 5 July 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

2018–19–ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) குமாரசாமி தாக்கல் செய்கிறார்.

பெங்களூரு,

2018–19–ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) குமாரசாமி தாக்கல் செய்கிறார். இதில் விவசாய கடன் தள்ளுபடி பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை

கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்–மந்திரியாக இருந்த சித்தராமையா 2018–19–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார்.அதைத்தொடர்ந்து கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்தது. தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். துணை முதல்–மந்திரியாக பரமேஸ்வர் நியமிக்கப்பட்டார். கர்நாடகத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால், முந்தைய காங்கிரஸ் பட்ஜெட்டை ரத்து செய்துவிட்டு, புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய குமாரசாமி முடிவு செய்தார்.

சித்தராமையா எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா, ஏற்கனவே தான் தாக்கல் செய்த பட்ஜெட்டையே அமல்படுத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும் கூறினார். இது கர்நாடக கூட்டணி ஆட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆயினும் ஜூலை 5–ந் தேதி (அதாவது இன்று) கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று குமாரசாமி அறிவித்தார். பட்ஜெட் குறித்து அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் கலந்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே தர்மஸ்தலாவில் ஆயுர்வேத இயற்கை மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுகையில் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வது சரியல்ல என்று கூறினார். அது தொடர்பான உரையாடல் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் குமாரசாமி திட்டமிட்டப்படி பட்ஜெட் தாக்கல் செய்வாரா? என்ற கேள்வி அரசியல் அரங்கத்தில் எழுந்தது.

கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல்

இயற்கை மருத்துவ சிகிச்சை முடித்துக் கொண்டு பெங்களூரு திரும்பிய சித்தராமையா, இந்த கூட்டணி ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை, இந்த ஆட்சி நிலைத்து நீடிக்கும் என்று கூறினார். இதனால் கூட்டணி ஆட்சிக்கு இருந்த ஆபத்து நீங்கியது. அதைத்தொடர்ந்து சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2018–19–ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்–மந்திரி குமாரசாமி இன்று(வியாழக்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்கிறார். காலை 11.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்பு 11 மணிக்கு மந்திரிசபை கூட்டம் விதான சவுதாவில் நடக்கிறது. அதில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் முக்கியமாக விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறுக்கு முன்பும், பின்பும் உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட முக்கியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

இது தவிர காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றுள்ள முக்கியமான வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. குமாரசாமி முன்பு 2 ஆண்டுகள் முதல்–மந்திரியாக இருந்தார். அப்போது அவருக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இது குமாரசாமி தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Next Story