காரணமின்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு: குடியிருப்புவாசிகள் ஆடு, மாடுகளுடன் தர்ணா போராட்டம்


காரணமின்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு: குடியிருப்புவாசிகள் ஆடு, மாடுகளுடன் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

காரணமின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கொத்தமங்கலம் குடியிருப்பு வாசிகள் ஆடு, மாடுகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 2 குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொது குழாய்கள் மட்டுமின்றி தனிநபர்களுக்கும் மாத கட்டணத்தில் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக குடிதண்ணீர் இணைப்புக்காக காத்திருந்த கூனரி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சில குடும்பத்தினர் வைப்புத் தொகை செலுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய இணைப்பு பெற்றனர். இதையடுத்து அன்று ஒரு நாள் மட்டும் குடிநீர் வழங்கப்பட்ட நிலையில் அன்று மாலையே அந்த புதிய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சிக்கான வைப்புத் தொகை செலுத்தி குடிதண்ணீர் இணைப்பு பெற்ற நிலையில் காரணமின்றி இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அதே நேரத்தில் குடிநீர் தொட்டி மோட்டார் இயக்குனரிடம் இருந்த மோட்டார் அறை சாவியை ஊராட்சி நிர்வாகத்தினர் வாங்கிச் சென்று விட்டனர். இதையடுத்து 4 நாட்களாக 2 குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிலர் மோட்டார் அறைக்கு மற்றொரு பூட்டு போட்டு பூட்டியுள்ளனர்.

இந்த நிலையில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கொத்தமங்கலம் குடியிருப்பு வாசிகள் சிலர் நேற்று தண்ணீர் கிடைக்கவில்லை, இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு கார ணம் தெரிய வேண்டும் என்று கோரிக்கை வைத்து, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காலிக்குடங்களுடன் தங்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை ஓட்டி வந்து குடிநீர்தேக்க தொட்டியின் அருகில் உள்ள பூட்டிய மோட்டார் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் வரை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டம் தொடர்ந்தது.

இது குறித்து போராட்டத்தில் இருந்த பெண்கள் கூறுகையில், “பல மாதங்களாக குடிதண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்த நாங்கள் நகைகளை அடகு வைத்து வைப்புத் தொகை செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றோம். ஒரு நாள் தண்ணீர் கொடுத்ததுடன் மறுநாள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லை கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. அதனால் தான் எங்கள் குழந்தைகளை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அவர்களையும் ஆடு, மாடுகளையும் காலிக்குடங்களுடன் மோட்டார் அறைக்கு வந்து காத்திருக்கிறோம். தண்ணீர் இணைப்பை சீரமைக்கும் வரை நாங்கள் வீட்டுக்கு போகமாட்டோம்” என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story