ரேஷன் கடையில் முறையாக அரிசி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


ரேஷன் கடையில் முறையாக அரிசி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையில் முறையாக அரிசி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக ரேஷன் கடையில் அரிசி முறையாக வழங்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடை விற்பனையாளரை கண்டித்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ரேஷன் கடை முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து தாசில்தார் குமரையா, வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் அரிசி வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் கூறியதாவது:- அரிசி தட்டுப்பாட்டிற்கு காரணம் சென்ற மாதம் எவ்வளவு அரிசி வழங்கப்பட்டதோ, அவ்வளவு அளவு உள்ள அரிசி மட்டுமே இந்த மாதமும் லோடு வரும். இதில் சென்ற மாதம் 15 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி வாங்காமல் இருந்திருப்பார்கள். அப்படி முன்பு வாங்காத நபர்களும், இந்த மாதம் அரிசி வாங்க வரும்போது சென்ற மாதம் விற்பனை செய்த அளவு மட்டுமே உள்ள அரிசியை வைத்து வழங்கும் சூழ்நிலையால் இந்த பற்றாக்குறை ஏற்படுகிறது. அது தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து வருகின்றோம். விரைவில் முழுமையாக சரி செய்யப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தட்டுப்பாடின்றி அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

Next Story