பணம் இல்லாததால் ஆத்திரம்: ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திய 2 பேர் கைது


பணம் இல்லாததால் ஆத்திரம்: ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2018 3:15 AM IST (Updated: 5 July 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

பணம் இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் வங்கி ஒன்று உள்ளது. அந்த வங்கியின் முன் பகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கண்ணூர் தென்னகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இம்மானுவேல் (வயது 22) என்பவர் தன்னுடைய நண்பரான காஞ்சீபுரம் மாவட்டம் மொளச்சூர் விஸ்வகர்மா தெருவை சேர்ந்த பிரபு (22) என்பவருடன் பணம் எடுப்பதற்காக சென்றார்.

பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். எந்திரத்துக்குள் கார்டை செலுத்தினார்கள். ஆனால் அதில் பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த இருவரும் அந்த ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். பின்னர் வங்கிக்கு வந்த அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டனர்.

இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர் மாருதி மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த ஏ.டி.எம். மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது இம்மானுவேல், பிரபு ஆகியோர் அந்த எந்திரத்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story