அவனியாபுரம் அருகே: நகை, பணம், செல்போன்கள் திருட்டு


அவனியாபுரம் அருகே:  நகை, பணம், செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 5 July 2018 4:30 AM IST (Updated: 5 July 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

அவனியாபுரம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் நகை, பணம், செல்போன்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை, 

சிந்தாமணி நடுத்தருவைச் சேர்ந்த சோனை மகன் பாண்டியராஜன் (வயது 30). இவர் விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் வீட்டில் இருந்த சோனை பகலில் கதவை திறந்து வைத்தபடி தூங்கி விட்டாராம். இதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ. 40 ஆயிரம், 2 செல்போன்களை திருடிச் சென்று விட்டான்.

அதைத்தொடர்ந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பாண்டியராஜன், அங்கு பணம், செல்போன்கள் திருடு போனது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார். மேலும் இது குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இதேபோல வள்ளானந்த புரம் சந்தோஷ் நகர் பகுதி யில் வசிப்பவர் முத்து கிருஷ்ணன் (48). ஆசிரியராக பணி புரிகிறார். இவர் காலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றவர், மாலை வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story