பட்டுக்கோட்டை-காரைக்குடி பயணிகள் ரெயில் பயண நேரம் இன்று முதல் 3 மணி நேரமாக குறைக்கப்படுகிறது


பட்டுக்கோட்டை-காரைக்குடி பயணிகள் ரெயில் பயண நேரம் இன்று முதல் 3 மணி நேரமாக குறைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 5 July 2018 4:00 AM IST (Updated: 5 July 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் பயண நேரம் இன்று(வியாழக்கிழமை) முதல் 3¼ மணி நேரமாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூர்,

காரைக்குடி-திருவாரூர் மீட்டர்கேஜ் பாதையை அகற்றி விட்டு அதற்கு பதில் அகல ரெயில்பாதை அமைப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான 75 கி.மீ. தூரத்துக்கு ரூ.700 கோடி செலவில் அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பட்டுக்கோட்டை-திருவாரூர் வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே கடந்த 30-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் காரைக்குடியில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு பட்டுக்கோட்டையை வந்தடையும். பட்டுக்கோட்டையில் இருந்து மீண்டும் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு காரைக்குடியை சென்றடையும்.

இதில் பஸ் பயணத்தை விட ரெயில் பயண நேரம் அதிகமாக உள்ளது என பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது பயண நேரத்தை குறைத்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கும் இயக்கப் படும் டெமு சிறப்பு ரெயில் நேரம் இன்று(வியாழக் கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வண்டி எண் 06856 காரைக்குடியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.02 மணிக்கு கண்டனூர் புதுவயலுக்கு வந்து 10.03 மணிக்கு புறப்படுகிறது. பெரியகோட்டை ரெயில் நிலையத்துக்கு 10.14 மணிக்கு வந்து 10.15 மணிக்கும், வாளரமாணிக்கத்துக்கு 10.25 மணிக்கு வந்து 10.26 மணிக்கும், அறந்தாங்கிக்கு 11 மணிக்கு வந்து 11.02-க்கும், ஆயிங்குடிக்கு 11.15 மணிக்கு வந்து 11.16 மணிக்கும் புறப்படுகிறது. பேராவூரணிக்கு 11.48 மணிக்கு வந்து 11.50 மணிக்கும், ஒட்டங்காட்டிற்கு 12.21 மணிக்கு வந்து 12.22 மணிக்கும் புறப்படுகிறது. பட்டுக்கோட்டைக்கு மதியம் 1 மணிக்கு வந்தடைகிறது.

இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து வண்டி எண் 06855 மதியம் 1.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் ஒட்டங்காட்டிற்கு 2.10 மணிக்கு வந்து 2.11 மணிக்கும், பேராவூரணிக்கு 2.24 மணிக்கு வந்து 2.50 மணிக்கும் புறப்படுகிறது. ஆயிங்குடிக்கு மாலை 3.19 மணிக்கு வந்து 3.20 மணிக்கும், அறந்தாங்கிக்கு 3.33 மணிக்கு வந்து 3.35 மணிக்கும், வாளரமாணிக்கத்துக்கு 4.09 மணிக்கு வந்து 4.10 மணிக்கும், பெரியகோட்டைக்கு 4.20 மணிக்கு வந்து 4.21 மணிக்கும், கண்டனூர் புதுவயலுக்கு 4.32 மணிக்கு வந்து 4.33 மணிக்கும் புறப்படுகிறது. காரைக்குடிக்கு 4.50 மணிக்கு வந்தடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்பு இந்த ரெயில் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வருவதற்கு 6½ மணி நேரம் ஆனது. ஆனால் தற்போது அது 3¼ மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story