பெண் தொழில் அதிபரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
பெண் தொழில் அதிபரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னை தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 30). இவர் அதே பகுதியில் பெட்ரோல் நிலையம் மற்றும் கடைகள் நடத்தி வருகிறார்.
இவர் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக கடந்த 2016-ம் ஆண்டு அடையாறு பகுதியை சேர்ந்த பிரபு (32) மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், வசுமதி ஆகியோரிடம் ரூ.68 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினார்.
பின்னர் வட்டியும், முதலுமாக ரூ.1 கோடியே 7 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் பிரபு உள்ளிட்ட 3 பேரும் கந்துவட்டி கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது. மேலும் விஜயலட்சுமி கொடுத்த பத்திரங்கள் மற்றும் காசோலைகளை திரும்ப கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்துவட்டி கேட்டு மிரட்டிய பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கார்த்திக் மற்றும் வசுமதியை தேடி வருகின்றனர்.
* சேலையூர் பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்ணிடம் செல்போன் பறித்துச்சென்ற சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
* போரூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது வீடு புகுந்து செல்போன் திருடிய அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
* ஆதம்பாக்கத்தை சேர்ந்த முருகேசன் (45) என்பவரது மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரத்தையும், அருகில் உள்ள ஜெயக்குமார் என்பவரின் டீக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
* புளியந்தோப்பு பகுதியில் வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்த குணசுந்தரி (33), கஸ்தூரி (40) ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏரியில் பிணம்
* பம்மல் நகராட்சிக்குட்பட்ட நாகல்கேணி பகுதியில் விதிமுறைகளை மீறி 56 தோல் தொழிற்சாலைகளில் கூடுதல் யூனிட்டுகள் பொருத்தி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கூடுதல் யூனிட்டுகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
* புழல் ரெட்டேரியில் சேப்பாக்கத்தை சேர்ந்த அமுதா (48) அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். சற்று மனநலம் சரியில்லாத அவர் ஏரியில் விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
* கொருக்குப்பேட்டையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடந்த முயன்ற சாகுல்ஆமிர் (28), அருண் (30) ஆகியோரை கைது செய்த போலீசார் 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
* மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆதம்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சரவணனை (38) மர்மநபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
* பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகளான நந்தகுமார் (25), ராஜசேகர் (25) உள்பட 6 பேரை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.
* மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட கடப்பா காலனி பகுதியில் பா.ஜனதா கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து நேற்று மாதவரம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட அக்கட்சியினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
* நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவரிடம் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு நிலம் விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கொளத்தூரை சேர்ந்த கெங்கம்மாள் (40) கைது செய்யப்பட்டார்.
* சென்னை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் கொழும்பு செல்ல முயன்ற ஆந்திராவை சேர்ந்த முகமது கரீம் (32), கபியாதுலக் (30), பசுலுல்லா (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story