பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் இன்னசென்ட் ஆய்வு


பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் இன்னசென்ட் ஆய்வு
x
தினத்தந்தி 4 July 2018 11:30 PM GMT (Updated: 4 July 2018 9:17 PM GMT)

சோலூர், நடுவட்டம், தேவர்சோலை ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் சோலூர், நடுவட்டம், தேவர்சோலை ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட செலக்கல்லில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 10 பேருக்கு ரூ.21 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் வீடுகள், நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட அனுமாபுரத்தில் சுகாதார பணிகள், அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் அரசு மாணவர் விடுதியை ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு சமையற்கூடத்தை ஆய்வு செய்து உணவின் தரம், இருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற வந்த கர்ப்பிணிகளிடம் முறையாக தடுப்பூசி போடப்படுகிறதா?, மருத்துவ சேவையில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்று கேட்டார். அதனை தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு உரிய தரமான சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பாலவயல் பகுதியில் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நடைபாலம், பேபி நகர் பகுதியில் டோல்டேக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சாலை, கல்லம்கொரை பகுதியில் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதியதாக பொருத்தப்பட்டு உள்ள குடிநீர் குழாய், பாலவயல் பழங்குடியினர் காலனி பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். அப்போது பழங்குடியின மக்கள் வீடுகள் கட்டி தருமாறு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட மசினகுடி, குரும்பர்பள்ளம் பகுதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பொதுக்கழிப்பிடத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜகோபால், பேரூராட்சி செயல் அலுவலர்கள் நந்தகுமார் (சோலூர்), முகமது இப்ராகிம் (நடுவட்டம்), குணாளன் (தேவர்சோலை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story