வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை வனத்துறையினர் எச்சரிக்கை
முதுமலை- கூடலூர் சாலையோரம் வரும் வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தெற்கு மற்றும் கூடலூர் வன கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம் என செயல்பட்டு வருகிறது. ஊட்டி வடக்கு வனக்கோட்டத்தில் இருந்த சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா வனச்சரகங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 367 சதுர கி.மீட்டர் பரப்பளவு வனம் முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் 321 சதுர கி.மீட்டர் பரப்பளவாக இருந்த முதுமலை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு 688 சதுர கி.மீட்டராக அதிகரித்து உள்ளது.
இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், புலிகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள், கரடிகள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கோடை வறட்சியால் முதுமலை, கூடலூர் வனம் பசுமை இழந்து காணப்பட்டது. இதனால் உணவு தட்டுப்பாடு காரணமாக வனவிலங்குகள் பல்வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றன. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் இன்றி முதுமலை புலிகள் காப்பகம் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கூடலூர், முதுமலை பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனங்களும் செழித்து வளர்ந்து உள்ளது. இதனால் உணவு தேடி வேறு பகுதிக்கு சென்றிருந்த வனவிலங்குகள் முதுமலை, கூடலூர் வனத்துக்கு திரும்பியது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
மேலும் முதுமலை- கூடலூர் மற்றும் மசினகுடி வழியாக ஊட்டி செல்லும் சாலையோரம் வனவிலங்குகள் கூட்டமாக வந்து நிற்பதை காண முடிகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் நின்று கண்டு ரசித்து வருகின்றனர். சில சமயங்களில் ஆர்வ மிகுதியால் புகைப்படம் மற்றும் செல்போனில் செல்பி எடுத்தல், கூச்சலிடுதல் உள்ளிட்ட செயல்களில் சுற்றுலா பயணிகள் ஈடுபடுகின்றனர்.
இதனால் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு வனத்துறையினர் அடிக்கடி ரோந்து சென்று வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சுற்றுலா பயணிகள் வரம்பு மீறுகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது-
சாலையோரம் உலா வரும் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் இடையூறு செய்யக்கூடாது. வனவிலங்குகளை வனப்பகுதிக்கு சென்று கண்டு களிக்க வனத்துறை வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் வனத்துறையின் பாதுகாப்போடு வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். ஆனால் சாலையில் செல்லும் போது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. அவ்வாறு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story