சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்ற வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது


சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்ற வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2018 4:30 AM IST (Updated: 5 July 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பெரியகடை வீதியில் சிறுவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி பெரியகடை வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் பெரியகடை வீதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெரியகடை வீதியில் ராஜஸ்தானை சேர்ந்த பலர் காலணிகள் விற்கும் கடை, பெல்ட் உள்ளிட்டவை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகிறார்கள். அந்த கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெரியகடை வீதியில் மொபட் ஒன்றில் 2 பேர் பெரிய மூட்டைகளுடன் வந்தனர்.

அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி விற்பனைக்காக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவற்றை கொண்டு வந்த பெரியகடை வீதி சின்ன கம்மாளத்தெருவை சேர்ந்த பாபுதாராம் மகன் ஓக்காராம் (வயது27), போலராம் மகன் தேவராம்(20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய மொபட்டும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் கொடுத்த தகவலின் பேரில், பெரியகடை வீதி கம்மாளத்தெருவை சேர்ந்த ஓக்காராமின் சகோதரர் மங்களராம்(25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் 2 மூட்டை புகையிலை, 1 மூட்டை பான்பராக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும்.

போதைப்பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்திருப்பதால், அவற்றை பதுக்கி வைத்து செருப்பு விற்கும் கடை, பெல்ட் கடை ஆகியவற்றில் வைத்து சிறுவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்து வருவதாக இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தெரிவித்தார். போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக கைதான 3 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் பெரியகடை வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்களை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற பொருட் களை பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே விற்பனை செய்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story