தி.மு.க. பிரமுகரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொல்ல முயற்சி


தி.மு.க. பிரமுகரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 5 July 2018 5:30 AM IST (Updated: 5 July 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் தி.மு.க. பிரமுகரை ஓடஓட விரட்டி வெட்டி கொல்லமுயற்சி நடந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர், 

காட்பாடி விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). தி.மு.க. பிரமுகரான இவர் கேபிள் டி.வி நடத்தி வருகிறார். இவரிடம் அஜித் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரை வஞ்சூரை சேர்ந்த சுனில் என்பவர் நேற்று முன்தினம் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அஜித், சீனிவாசனிடம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலையில் சீனிவாசன், சுனிலை பார்த்துள்ளார். அப்போது அஜித்தை அடித்தது குறித்து கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.


இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் சீனிவாசன் விருதம்பட்டு மெயின்ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது சுனில் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான விருதம்பட்டை சேர்ந்த மகேஷ், சந்தோஷ் ஆகியோர் அங்குவந்துள்ளனர். அவர்கள் சீனிவாசனை திடீர் என்று கத்தியால் வெட்டத்தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவர்கள் விடாமல் சீனிவாசனை ஓடஓட விரட்டி வெட்டி உள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே சீனிவாசனை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் உடனடியாக சீனிவாசனை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேஷ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். தப்பி ஓடிய மகேஷ் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதானவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

விருதம்பட்டில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story