பள்ளி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால் வழக்குபதிவு செய்யப்படும்
திருப்பூரில் பள்ளி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் உதவி கமிஷனர் தங்கவேல் எச்சரிக்கை செய்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூரில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு பழைய பஸ்நிலையம் அருகே உள்ள கே.எஸ்.சி. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரும், டவுன்ஹால் அருகே உள்ள நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பலமுறை மோதிக்கொண்டனர். அவர்களுக்கு போலீசார் பெற்றோர் முன்னிலையில் அறிவுரை கூட்டங்கள் நடத்தி, அவர்களின் எதிர்கால வாழ்கை வீணாகி விடக் கூடாதே என்பதற்காக அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கூட முடியாத நிலையில், கடந்த வாரம் இந்த 2 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பழைய பஸ்நிலையத்தில் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் கற்களை வீசியும், கைகளால் தாக்கியும் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 15 மாணவர்களை சுற்றி வளைத்து பிடித்து சென்றனர். பின்னர் போலீசார் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, மாணவர்களை எச்சரித்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் கே.எஸ்.சி. அரசு பள்ளியில் மாணவர்களுக்கான அறிவுரை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் தங்கவேல் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களாகிய நீங்கள் அடிக்கடி இவ்வாறு மோதிக்கொள்வது சரியில்லை. இது உங்களுடைய எதிர்கால வாழ்க்கையை பாழாக்கிவிடும். மாணவ பருவத்தில் உள்ள நீங்கள் மற்ற பள்ளி மாணவர்களுடன் நட்புடன் பழக வேண்டும். யாரையும் எதிரியாக நினைக்கக்கூடாது. இதுவே உங்களுக்கு கடைசி எச்சரிக்கை.
இனிமேலும் இது போன்ற மோதல்களில் ஈடுபட்டால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வழக்கு பதிவு செய்யப்பட்டால் உங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே இதை மனதில் வைத்துக்கொண்டு படிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் உங்கள் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசு, பள்ளி தலைமையாசிரியர் ராஜா மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story