குடிநீர் கட்டண உயர்வு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த மனுக்கள்
அவினாசி பேரூராட்சி யில் குடிநீர் கட்டண உயர்வு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் குவிந்தன.
அவினாசி,
அவினாசி பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பேரூராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பேரூராட்சியின் இந்த கட்டண உயர்வு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் பணிநிறைவு ஆசிரியர் கூட்டணி, தமிழர்பண்பாடு கலசார பேரவை, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் மற்றும் பொது நல அமைப்புகள் ஒன்றிணைந்து பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்து 600 மனுக்களை செயல் அலுவலர் சுந்தர்ராஜிவிடம் கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பேரூராட்சி பகுதியில் மாதத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தியது மிகுந்த வேதனையாக உள்ளது. செயல் அலுவலர் நடைமுறை நிர்வாகத்தை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே கட்டண உயர்வு மேற்கொள்ளவேண்டும். கட்டண உயர்வை தண்டோரா மூலம் அல்லது அலுவலக அறிவிப்பு வேன் மூலம் தெரிவிக்காமல் இருப்பது ஆட்சேபனைக் குரியது. மாதம் 10,500 லிட்டர் குடிநீர் வரை மாதம் ரூ.150 எனவும் அதற்கு மேல் ஒவ்வொரு 1000 லிட்டருக்கும் ரூ.15 என உயர்த்தியுள்ளது.
வீடுகளுக்கு மீட்டர் பொருத்திய பின்னரே இத்திட்டத்தை அமல்படுத்த முடியும். 1.6.2018-ல் தீர்மானம் போட்டு 1.12.2017 முதல் முன் தேதியிட்டு கட்டண உயர்வை அமல்படுத்துவது நடைமுறை சட்டம் மற்றும் இயற்கை நீதியை மாற்றிய செயலாக உள்ளது. வரிவிதிப்புகளை திட்டமிட்டு தீர்மானித்த பின்னர் மக்கள் அறிய அறிவிப்பு செய்து மக்கள் ஒப்புதலுடன் உயர்வு இருக்க வேண்டும். அந்த உயர்வும் கூட ஒரே அடியாக வைப்புத்தொகையை 100 சதவீத அளவும், குடிநீர் கட்டணம் 200 சதவீத அளவுக்கும் உயர்த்துவது ஜனநாயக அரசியல் செய்யக்கூடாத செயலாகும்.
குடிநீர் தடையின்றி தேவைக்கு ஏற்ப வழங்கும் நிலையை எட்டிய பிறகே உபயோகத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க முடியும். அதுவரையிலும் மாதம் 10 ஆயிரத்து 500 லிட்டர் குடிநீர் வினியோகத்தை உறுதிப்படுத்திய பின்னர் மக்கள் கருத்தை அறிந்து மக்கள்பிரதிநிதிகள் உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே குடிநீர் கட்டண உயர்வு குறித்து தெரிவிக்க வேண்டும். அதுவரை கட்டண உயர்வை அமல்படுத்தக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story