சாமியார்மடம் அருகே விபத்து: காயமடைந்த சிறுமி சாவு


சாமியார்மடம் அருகே விபத்து: காயமடைந்த  சிறுமி  சாவு
x
தினத்தந்தி 6 July 2018 4:00 AM IST (Updated: 5 July 2018 10:49 PM IST)
t-max-icont-min-icon

சாமியார்மடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.

பத்மநாபபுரம்,

சாமியார்மடம் அருகே உள்ள காட்டாத்துறையை சேர்ந்தவர் நடராஜன், கூலி தொழிலாளி. இவரது மனைவி ரெத்தினபாய் (வயது55). இவர்களுக்கு மகேஷ் (29) என்ற மகனும், அனிஷா(28) என்ற மகளும் உள்ளனர். அனிஷாவுக்கும், புலிப்பனம் மேலமஞ்சாவிளை பகுதியை சேர்ந்த ராஜனுக்கும் திருமணம் முடிந்து அனுபிரித்திகா(3) என்ற மகள் உள்ளார். அனிஷா சாமியார் மடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காசாளராக உள்ளார்.

இதனால் அனிஷா வேலைக்கு செல்லும்போது தாயார் ரெத்தினபாய் வீட்டில் தனது மகளை விட்டு செல்வார். மாலையில் ரெத்தினபாய் பேத்தியை அழைத்துக்கொண்டு மகள் வீட்டில் விடுவது வழக்கம்.

சம்பவத்தன்று மாலையில் பேத்தி அனுபிரித்திகாவை, மகள் வீட்டில் விட தனது மகன் மகேசுடன் ரெத்தினபாய் சென்றார். அவர்கள் புலிப்பனம் சந்திப்பில் சென்றபோது, கண்ணனூரை சேர்ந்த ஷாஜின் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ரெத்தினபாய் மற்றும் பேத்தி அனுபிரித்திகா இருவரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள் ரெத்தினபாய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சிறுமி அனுபிரித்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அனுபிரித்திகா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story