பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்பு


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்பு
x
தினத்தந்தி 6 July 2018 3:30 AM IST (Updated: 5 July 2018 11:27 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் நடராஜன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

ராமநாதபுரம்,


பொது மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு மழைநீர் தங்குதடையின்றி முழுமையாக நிலத்தடிக்குள் சென்று நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் மற்றும் உதவி இயக்குனர் நிலையிலான அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் வருகிற 15-ந்தேதி முதல் முதல்கட்டமாக ரூ.500-க்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும் எனவும், மீண்டும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டறியப்படும் ஒவ்வொரு முறையும் ரூ.1000-க்கு குறையாமல் அபராதம் விதிப்பதுடன் ஒத்துழைக்க மறுக்கும் வணிகர்களது வணிக உரிமத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் நடராஜன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களது அலுவலகங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்துவதை 100 சதவீதம் தவிர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதே வேளையில் தங்களது குடும்பத்தார், உற்றார், உறவினர் மற்றும் சுற்றத்தார்களிடத்தில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சிலீமா அமாலினி, பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மாரியம்மாள் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story