அண்ணன், தம்பி கழுத்தை அறுத்து படுகொலை நரபலியா? போலீசார் விசாரணை


அண்ணன், தம்பி கழுத்தை அறுத்து படுகொலை நரபலியா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 July 2018 4:30 AM IST (Updated: 6 July 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் அண்ணன், தம்பி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வலப்பூர்நாடு ஆலவாடிபட்டியை சேர்ந்தவர்கள் முத்துசாமி (வயது 55), சீரங்கன் (45). இருவரும் அண்ணன், தம்பி ஆவர். கடந்த மாதம் 30-ந் தேதி இருவரும் ஆலவாடிபட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் அருகே ஒரு ஆம்னி வேன் வந்து நின்றது.

இந்த வேனில் இருந்து இறங்கிய 3 பேர் அரப்பளஸ்வரர் கோவிலுக்கு செல்ல எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று கூறி முத்துசாமி, சீரங்கனை அழைத்து சென்றனர். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, அனைவரும் சீரங்கன் வீட்டிற்கு திரும்பினர். அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டதால், அனைவரும் மது குடித்து விட்டு கோழிக்கறி சமைத்து சாப்பிட்டு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த 3 பேரும் மீண்டும் சீரங்கன் வீட்டிற்கு வந்து கோழிக்கறி சமைத்து சாப்பிட்டு விட்டு, மது குடித்து உள்ளனர். பின்னர் அந்த 3 பேரும் எங்களுக்கு தோஷம் இருக்கிறது. அதை கழிக்க வேண்டும். எனவே சுடுகாட்டுக்கு வழிகாட்டுங்கள் என்று கூறி இரவில் முத்துசாமியையும், சீரங்கனையும் அழைத்துச் சென்றனர். அப்போது சீரங்கனின் மனைவி ராசம்மாள் வீட்டில் இருந்தார்.

இரவு சுமார் 11 மணியளவில் அந்த 3 பேர் மட்டும் தனியாக ராசம்மாள் வீட்டிற்கு வந்தனர். அப்போது ராசம்மாள் பதறியபடி, எனது கணவரும், அவருடைய அண்ணனும் எங்கே? என்று கேட் டார். அதற்கு அவர்கள், இருவரும் திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் கைப்பை வீட்டில் உள்ளது, அதை எடுக்க வந்தோம் என்று கூறிவிட்டு, பையை எடுக்க வீட்டிற்குள் செல்ல முயன்றனர்.

அப்போது ராசம்மாள் எனது கணவரும், அவருடைய அண்ணனும் வந்தால்தான் உங்களை வீட்டுக்குள் விடுவேன் என்றுக் கூறி கைப்பையை தர மறுத்து, வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதையடுத்து அந்த 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதையடுத்து வெகுநேரம் ஆகியும் கணவரும், அவரது அண்ணனும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த ராசம்மாள் நள்ளிரவில் உறவினர்கள் மற்றும் அக்கம்,பக்கத்தினரை அழைத்துக்கொண்டு இருவரையும் தேடினார். அப்போது பகுடிபுதுவலவு சுடுகாட்டு பகுதியில் முத்துசாமியும், சீரங்கனும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதைக்கண்டு ராசம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

கொலையுண்ட முத்துசாமி, சீரங்கன் ஆகியோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது உறவினர்கள் கூலிப்படையை ஏவி அண்ணன், தம்பி இருவரையும் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொலை செய்து இருக்கலாம். அண்ணன், தம்பியுடன் நட்பாக பழகிய அந்த 3 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அந்த கூலிப்படையினர் அண்ணன், தம்பி இருவரையும் கொலை செய்து விட்டு, இந்த சம்பவத்தை திசை திருப்ப நரபலி கொடுக்கப்பட்டதாக நாடகமாடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சுடுகாட்டில் வைத்து இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story