தனியார் மருத்துவமனைக்கு நிகராக சுத்தம், சுகாதாரம் பேணப்படும் கம்பம் அரசு மருத்துவமனை
கம்பம் அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக சுத்தம், சுகாதாரம் பேணப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊர்களில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இதில் கம்பத்தில் உள்ள மருத்துவமனையில் 100 படுக்கை வசதி உள்ளது. இங்கு கம்பம் சுற்று வட்டார பகுதியில் இருந்தும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். தினமும் வெளிநோயாளிகளாக ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு 21 டாக்டர்கள் பணியில் உள்ளனர்.
இந்த மருத்துவமனை முழுவதும் தூய்மை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கண்டகண்ட இடங்களில் குப்பை கொட்டக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது என்று நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறிய அளவில் ஸ்பீக்கர் வைத்து இதமான ராகங்கள் மட்டும் இசைக்கப்படுகிறது.
மருத்துவமனையில் சுகாதார பணிகளை கண்காணிக்க 21 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை உறவினர்கள் பார்வையிட பார்வையாளர் நேரம் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் நோயாளிகளை பார்வையிட அனுமதி இல்லை. அனைத்து வார்டு பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, தனியார் மருத்துவமனைக்கு நிகராக இங்கு சுத்தம், சுகாதாரம் பேணப்படுகிறது. நுழைவு வாயிலில் மருத்துவமனைக்கு வரும் வாகனங்களின் எண்களை எழுதிவைக்கவும் பிற நபர்களை கண்காணிக்கவும் காவலாளி பணிஅமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த மருத்துவமனை மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெருமளவுக்கு சுத்தமாகவும், நவீன வசதிகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இங்கு தேனி மாவட்டத்திலே அதிக எண்ணிக்கையில் குழந்தை பிறப்பு உள்ளது. எனவே இந்த மருத்துவமனைக்கு சீமாங்சென்டர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது(சீமாங்சென்டர் என்றால் 24 மணிநேர பிரசவம் பார்க்கும் வசதி கொண்ட மருத்துவமனை). இதன்காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் கர்ப்பிணிகள் இங்கு பிரசவத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி டாக்டர் பொன்னரசன் கூறும்போது, மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் பெரும்பாலும் சுகபிரசவம்தான் நடைபெறுகிறது. 24 மணி நேரமும் கர்ப்பிணிகளை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.
Related Tags :
Next Story