அம்பை அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிப்பு


அம்பை அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 6 July 2018 3:00 AM IST (Updated: 6 July 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

அம்பை அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

அம்பை அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சதிக்கல் கண்டுபிடிப்பு

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அயன் திருவாலிசுவரம் பகுதியில் பொற்றாமரை குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தின் வடகரையில் சதிக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளரும், நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியருமான சங்கரநாராயணன் கூறியதாவது:-

உடன்கட்டை ஏறுதல்

மனித சமூக வரலாறு என்பது பெண்ணை தலைமையாக கொண்ட இனக்குழு சமூக அமைப்பில் இருந்து வளர்ச்சி அடைந்ததுதான் என்றாலும், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக பொருளாதார காரணங்களால் ஊட்டப்பட்ட நம்பிக்கைகளால் பெண் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டாள். கணவனுக்காகவே மனைவி, அதைவிட பெண்ணுக்கு உலகில் எதுவும் இல்லை என்ற கருத்து உருவாக்கம் பெற்றது.

இதனால் கணவன் இறந்தபோது, அவன் இல்லாத வாழ்க்கையை, வாழ்க்கையாக கருதாமல் அவனோடு சேர்ந்தே இறக்க வேண்டும் என்ற மரபு தோன்றியது. இறந்த கணவனை எரியூட்டிய தீயில் தானும் குதித்து இறப்பதை உடன்கட்டை ஏறுதல் என்று சமுதாயம் புகழ்ந்து கூறியது. இதனையே சதி என்றும் அழைத்தனர். அவளின் நினைவாக கணவனின் உருவத்தோடு கல்லில் சிற்பமாக செதுக்கி வைத்தனர். இதனையே சதிக்கல் என்று கூறுவர். உடன்கட்டை ஏறிய பெண்ணை சமுதாயம் தெய்வமாக போற்றி வணங்கவும் செய்தது.

17-ம் நூற்றாண்டை சேர்ந்தது

அயன் திருவாலிசுவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சதிக்கல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். இதில் ஆணும், பெண்ணும் அமர்ந்த நிலையில் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. ஆண் உருவம் வலப்புறமும், பெண் உருவம் ஆணின் இடப்புறமும் காட்டப்பட்டு உள்ளன. ஆண் உருவம் வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து அமர்ந்துள்ளது. வலது கை தொடை மீது அமர்த்தப்பட்டும், இடது கை வியப்பு முத்திரையை காட்டியும் விளங்குகிறது. கையில் வீரக்காப்பும், காதணியும் காட்டப்பட்டு உள்ளன.

பெண் உருவம் இடது காலை தொங்கவிட்டும், வலது காலை மடித்தும் அமர்ந்துள்ளது. வலது கை மலர்ச்செண்டை ஏந்திய நிலையிலும், இடது கை தொடை மீது அமர்த்தப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது. காதணி, கழுத்தணி அழகாக காட்டப்பட்டு உள்ளன. கைகளில் வளையல்களும், கால்களில் தண்டையும் காணப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story