திருநங்கைகளுக்கு இடையே மோதல்; அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு 8 பேர் மீது வழக்குப்பதிவு
திருநங்கைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டத்தில் அரசு மருத்துவமனை கண்ணாடி உடைக்கப்பட்டது. இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் துர்காதேவி(வயது 28), நிகிதா(27), மகிதா(29), சிறுமதி(26), ஜெனனி(27). இதேபோல் கரூர் அரசு காலனியை சேர்ந்தவர்கள் நிக்கிதா(27), விஜி(24), அழகி(23). திருநங்கைகளான இவர்கள் 8 பேரும் கரூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிச்சை எடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். காயம் அடைந்த 8 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தரப்பை சேர்ந்தவர்களும் அளித்த புகாரின் பேரில் 8 திருநங்கைகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.