தார்சாலை பணியை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் தரமாக அமைக்க கோரிக்கை


தார்சாலை பணியை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் தரமாக அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 6 July 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

கருமலை அருகே தரமற்ற தார்சாலை அமைக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை அடுத்த கருமலையில் இருந்து கண்ணூத்து வரையிலான சாலை பழுதடைந்து மிக மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், நிதி ஒதுக்கப்பட்டு இந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று எண்டபுளி பகுதியில் தார் போடும் பணி நடைபெற்றது.

இதனை பார்த்த பொதுமக்கள் சாலையின் தரம் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியதோடு, தரமான சாலை அமைக்கக்கோரி திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், மருங்காபுரி தாசில்தார் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிற பகுதிகளில் நவீன எந்திரங்கள் மூலம் தார்சாலை அமைக்கப்படுகிறது. இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை வந்து பாருங்கள், பின்னர் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறி புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை காட்டியதோடு தரமான சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். இல்லையேல், போராட்டத்தை தொடர்வோம் என்றனர்.

இதனால், பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம், உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், சாலை அமைக்கும் பணியால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எண்டபுளி பகுதிக்கு வந்த பஸ்சும் வருவதில்லை. அதையும் உடனடியாக இயக்க வேண்டும், இல்லையேல் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story