சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு விமானத்தில் அடுத்தடுத்து எந்திரக்கோளாறு
பெங்களூரு விமானத்தில் அடுத்தடுத்து எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கொச்சி வழியாக பெங்களூருவுக்கு பகல் 12 மணிக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் 96 பயணிகளும் 5 விமான சிப்பந்திகளும் பயணம் செய்ய இருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் மாலை புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மாலையில் எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டு அனைவரும் ஏறியபிறகு விமானம் ஓடுபாதை நோக்கி சென்றது. அப்போது மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த பயணிகள் கூச்சல் போட்டனர். அவர்களிடம் விமான நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் ஓட்டல்களில் தங்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை உரிய நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் அதிர்ஷ்டவசமாக 101 பேரும் உயிர் தப்பினர். மேலும், அடுத்தடுத்து எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story