தர்மபுரி மாவட்டத்தில் 2–வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் நேற்று 3–வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த போராட்டத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஊரகவளர்ச்சி துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்தனர். உயர் அதிகாரிகள் உள்பட குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால் இந்த அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் வெறிச்சோடின. இந்த தொடர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.