ரூ.9 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை அறிவித்து உள்ளேன்: சித்தராமையா பட்ஜெட் அப்படியே அமல்படுத்தப்படும் குமாரசாமி பேட்டி


ரூ.9 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை அறிவித்து உள்ளேன்: சித்தராமையா பட்ஜெட் அப்படியே அமல்படுத்தப்படும் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 6 July 2018 4:00 AM IST (Updated: 6 July 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா பட்ஜெட் அப்படியே அமல்படுத்தப்படும் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

சித்தராமையா பட்ஜெட் அப்படியே அமல்படுத்தப்படும் என்று குமாரசாமி கூறினார்.

பட்ஜெட் குறித்து முதல்–மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

அப்படியே அமல்படுத்தப்படும்

நான் இன்று(நேற்று) கூட்டணி ஆட்சியின் 2018–19–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட் அப்படியே அமல்படுத்தப்படும். அத்துடன் ரூ.9 ஆயிரம் கோடிக்கு நான் திட்டங்களை அறிவித்துள்ளேன். அதனால் சில துறைகள் தொடர்பான திட்டங்களை நான் அறிவிக்கவில்லை.

ஏனென்றால் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனால் தங்கள் பகுதிக்கு நிதி கிடைக்கவில்லையே என்று யாரும் கவலைப்பட தேவை இல்லை. ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறி இருக்கிறேன். இதனால் விவசாயிகள் பயன் பெறுவார்கள். இதையும் பா.ஜனதாவினர் குறை சொல்கிறார்கள்.

பணம் அச்சடிக்கும் எந்திரம்

எடியூரப்பா முன்பு நிதித்துறை மந்திரியாக இருந்தபோது, விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் கேட்டோம். அதற்கு அவர் என்னிடம் பணம் அச்சடிக்கும் எந்திரம் உள்ளதா? என்று கேட்டார். இப்போது நான் அவரை பார்த்து கேட்கிறேன், என்னிடமும், பரமேஸ்வரிடமும் பணம் அச்சடிக்கும் எந்திரம் உள்ளதா? மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளதா?.

வளர்ச்சி திட்டங்களுக்காக பெட்ரோல்–டீசல் வரியை உயர்த்தி இருக்கிறோம். அவ்வாறு இருந்தாலும், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் அவற்றின் விலை குறைவாக தான் உள்ளது. பெட்ரோல்–டீசல் விலையை மத்திய அரசு பலமுறை உயர்த்தியது. அப்போது எடியூரப்பா அதுபற்றி கேள்வி கேட்காமல் இருந்தது ஏன்?.

அனைத்து பகுதிகளுக்கும் நிதி

மண்டியா, ராமநகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் நான் நிதி ஒதுக்கி இருப்பதாக குறை கூறுகிறார்கள். மற்ற பகுதிகளுக்கும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சித்தராமையா பட்ஜெட்டில் அனைத்து பகுதிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை குறை சொல்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story