முந்தைய காங்கிரஸ் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் குமாரசாமி அறிவிப்பு
பட்ஜெட் தாக்கல் செய்த முதல்–மந்திரி குமாரசாமி ‘‘முந்தைய காங்கிரஸ் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’’ என்று அறிவித்தார்.
பெங்களூரு,
பட்ஜெட் தாக்கல் செய்த முதல்–மந்திரி குமாரசாமி ‘‘முந்தைய காங்கிரஸ் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’’ என்று அறிவித்தார்.
முதல்–மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது:–
தாய்மை உணர்வுள்ள அரசு‘‘கர்நாடகம் நிதிநிர்வாகத்தில் உரிய நெறிமுறைகளை பன்நெடுங்காலமாக கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் விவசாய கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய சவாலாக இந்த அரசுக்கு இருந்தாலும் நிதிநிர்வாக நெறிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்பதை இந்த அவைக்கு தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு அரசாங்கம் என்பது தாய்மை உணர்வோடு இருக்க வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. அந்த வகையில் தாய்மை உணர்வோடு இந்த கூட்டணி அரசாங்கமானது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும். அதோடு முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். அதன்மூலம் மக்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
கனவு திட்டங்கள்கர்நாடகத்தின் கிராமப்புறங்களில் கனவு திட்டங்களை செயல்படுத்த இந்த அரசு முடிவு செய்து இருக்கிறது. இளைஞர்களின் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்த இந்த அரசு விரும்புகிறது. அதுபோல் பெண்கள் முன்னேற்றத்துக்கும் பாடுபடும். முக்கியமாக விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றுவது இந்த அரசின் முடிவான முடிவாக உள்ளது. கவி குவெம்புவின் வழிகாட்டுதல்படி சாதாரண சாமானிய மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த கூட்டணி அரசு உழைக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.
மாநிலத்தின் உற்பத்தி 2017–18–ம் ஆண்டில் 8.5 சதவீதமாக உள்ளது. இது 2016–17–ம் ஆண்டில் 7.5 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் விவசாயத்துறை மற்றும் தொழில்துறையின் வளர்ச்சி தலா 4.9 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இது 3.7 சதவீதமாக இருந்தது. அதுபோல் சேவைத்துறை 10.4 சதவீதம் என்ற புதிய வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிதி கமிஷன் அறிக்கைமாநில அரசு கடந்த 2015–ம் ஆண்டில் 4–வது நிதி கமிஷனை ஏற்படுத்தியது. அந்த கமிஷன் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. அதில் 2018–19 முதல் 2022–23–ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டியவை குறித்த பரிந்துரைகளை சமர்ப்பித்து உள்ளது. அதில் மாநில அரசின் வரி வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 48 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. தற்போதைய ஒதுக்கீடு 42 சதவீதம். இதனை அரசு அடுத்த 5 ஆண்டுகளில் அமல்படுத்த முடிவு செய்து இருக்கிறது.
கர்நாடக நிதி நிர்வாக பொறுப்பு சட்டம் 2002–ன்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய முயற்சி செய்து உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி மற்றும் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வால் மற்ற வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் நலத்திட்டங்கள்இதற்கு முந்தைய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தது. அந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கிறேன். அதுபோல் கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கிறேன்.’’
இவ்வாறு அவர் பேசினார்.