பெங்களூருவில் மேம்பால சாலைகள் அமைக்க ரூ.15,825 கோடி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அறிவிப்பு


பெங்களூருவில் மேம்பால சாலைகள் அமைக்க ரூ.15,825 கோடி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2018 3:30 AM IST (Updated: 6 July 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 6 இடங்களில் மேம்பால சாலைகள் அமைக்க ரூ.15,825 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து முதல்–மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் 6 இடங்களில் மேம்பால சாலைகள் அமைக்க ரூ.15,825 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து முதல்–மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

முதல்–மந்திரி குமாரசாமி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று கர்நாடக 2018–2019–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மேம்பால சாலைகள் அமைக்க...

*ஹாசன் மாவட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் ஹாசன் மாவட்டத்தைச் சுற்றி ரூ.30 கோடி செலவில் வெளிவட்ட சுற்றுப்பாதை அமைக்கப்படும்.

*பெங்களூருவில் சரக்கு பரிவர்த்தனைக்காக அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.15,825 கோடி செலவில் 6 இடங்களில் ஒன்றோடொன்று தொடர்புடைய வகையில் மேம்பால சாலைகள் அமைக்கப்படும். இந்த பணிகள் கே.ஆர்.டி.சி.எல். மூலம் நடைபெறும். இதற்காக இவ்வாண்டு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுகிறது.

பெங்களூரு மேம்பாட்டு ஆணையம்

*பெல்லந்தூர் ஏரியை தூர்வாரி, சுத்தப்படுத்தி, தண்ணீர் நிரப்ப ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் பெல்லந்தூர் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் பெங்களூரு புறநகர் பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

*பெங்களூரு புறநகர் பகுதியில் வெளிவட்ட சுற்றுப்பாதை அமைக்கவும், அதற்காக நிலங்களை கையகப்படுத்தவும் ரூ.11,950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் மூலம் மேற்கொள்ளப்படும்.

நவீன வாகன நிறுத்தங்கள்

*அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 5 நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக நவீன வாகன நிறுத்தங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*ஜி.ஐ.எஸ் வழியாக பெங்களூருவில் உள்ள குடிநீர் வினியோகம் மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைப்பு குறித்த விவரங்களை செயற்கைகோள் புகைப்படம் மூலம் மக்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ய திட்டம்.

*ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னபட்டணா ஏரியைச் சுற்றி சாலைகள், பாலங்கள், படகு சவாரி, செயற்கை நீரூற்று, சிறுவர்கள் பூங்கா, சிறுவர்களுக்கான ரெயில் ஆகியவை அமைக்க ரூ.36 கோடி ஒதுக்கீடு.

*மண்டியா மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

*ரசாயன கழிவுநீர் சாக்கடைகளில் கலக்கப்படுகிறது. இந்த நீர் ஆறுகளில் கலந்தால் ஆற்று நீரின் தன்மை அசுத்தமாகிவிடும். அதனால் ரசாயனங்கள் கலப்பதை தடுக்க பெங்களூருவில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

*மைசூரு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.

*ரூ.1 கோடி செலவில் மைசூரு மாகாணம், ஆங்கிலேயர்களுக்கு இடையான ஒப்பந்தம், சட்ட ஆவணங்கள், பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் கோப்புகள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகம் அமைக்க திட்டம்.

*பெங்களூரு பார் கவுன்சிலை மேம்படுத்த ரூ.5 கோடி.

இவ்வாறு முதல்–மந்திரி குமாரசாமி கூறினார்.


Next Story