பண மோசடியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது


பண மோசடியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 6 July 2018 4:00 AM IST (Updated: 6 July 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அரசு அதிகாரி போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர், 

கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் பிரதீப்(வயது 40). இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி இவருடைய நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு ஒருவர் அழைத்துள்ளார்.

அதில் பேசியவர், தன்னை வணிகவரித்துறை உயர் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அப்போது உங்கள் பனியன் நிறுவனத்துக்கு ஜி.எஸ்.டி. வரி அதிகமாக உள்ளது. அதை குறைத்து தருகிறேன். அதற்கு ரூ.2 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார்.

அதை நம்பிய பிரதீப் அந்த நபரின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார். சில நாட்கள் கடந்த பின்னர் மீண்டும் அந்த நபர், பிரதீப்பை தொடர்பு கொண்டு மேலும் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். இந்த தொகையையும் அவர் வங்கி கணக்கில் பிரதீப் செலுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து 3-வது முறையாக அந்த நபர் பிரதீப்பை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பிரதீப் உடனடியாக இது குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சந்தான பாரதி(40) என்பது தெரிய வந்தது.

அத்துடன் தாசில்தார், வருவாய் அதிகாரி, சினிமா பட இயக்குனர் என தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் இவர், தமிழகம் முழுவதும் இதுபோல் பல்வேறு இடங்களில் பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுபோல் அவர் மீது பணமோசடி, திருட்டு, வழிப்பறி உள்பட மொத்தம் 15 வழக்குகள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளையும், 5 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தானபாரதி, ஒவ்வொரு முறையும் மோசடியில் ஈடுபடும் போதும், அவருடைய செல்போன் செயலி மூலம் பல குரல்களில் பேசி சம்பந்தப்பட்ட நபர்களை ஏமாற்றி உள்ளார்.

அவர் திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில ஊர்களில் கலெக்டர் என்றே பலரும் நம்பும் அளவிற்கு அவர்களை ஏமாற்றி வைத்துள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், தொடர்ந்து அவர் மோசடியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி திருப்பூர் போலீஸ் கமிஷனர் மனோகரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சந்தானபாரதியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதற்கான நகலை கோவை மத்திய சிறையில் உள்ள சந்தானபாரதியிடம் போலீசார் வழங்கினார்கள்.

Next Story