5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து தரமான தீர்ப்பு வழங்க வேண்டும்


5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து தரமான தீர்ப்பு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 6 July 2018 3:30 AM IST (Updated: 6 July 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

‘5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து தரமான தீர்ப்பு வழங்க வேண்டும்‘ என்று வேடசந்தூரில் நடந்த கோர்ட்டு திறப்பு விழாவில் மாவட்ட நீதிபதி முரளிசங்கர் பேசினார்.

வேடசந்தூர்,


வேடசந்தூர் கோர்ட்டு வளாகத்தில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட நீதிபதி முரளிசங்கர் தலைமை தாங்கி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கலெக்டர் டி.ஜி.வினய் குத்துவிளக்கேற்றினார். விழாவில் மாவட்ட நீதிபதி முரளிசங்கர் பேசும்போது கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 34 ஆயிரத்து 421 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேடசந்தூரில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு கூடுதலாக உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.

தாமதமாக கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்று சொல்வார்கள். அவசரமாக வழங்கப்பட்ட நீதி, ஒதுக்கப்பட்டதற்கு ஒப்பான நீதி என்று கூறுவார்கள். ஆனால் அவசர கதியில் வழங்கப்பட்ட நீதிக்கும், விரைவான நீதிக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. உதாரணமாக ஒரு கொலை வழக்கில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணையை முடித்து 20 முதல் 30 நாட்களில் தீர்ப்பு வழங்கினால் அது தான் அவசர கதியான தீர்ப்பு என்று உச்சநீதிமன்றம் கண்டிக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றவியல் சட்டப்படி வாய்ப்பு வழங்க வேண்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு களை விசாரித்து தீர்வு காண்பது தான் சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். 5 வருடங்களுக்கு மேல் உள்ள வழக்குகளை முழுமையாக முடிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான் 2016-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றபோது, நமது மாவட்டத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 27 சதவீத வழக்குகள் 5 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்தன. தமிழகத்தில் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் 2-வது இடத்தில் இருந்தது.

ஆனால் கடந்த 2 வருடங்களில், நீதிபதிகள் சிறப்பாக செயல்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை 21 சதவீதமாக குறைத்திருக்கிறோம். ஆனால் வருகிற மார்ச் மாதத்துக்குள் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை 11 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

நீதிபதிகள் அதிகப்படியான வழக்குகளை விசாரித்து முடிக்க வேண்டும். அதேநேரத்தில், தாங்கள் வழங்கும் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும். இதற்கு இரு தரப்பு வக்கீல்களின் வாதங்களை முன் வைக்க வேண்டும். நீதிபதிகள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டால் பலன் அளிக் காது. நீதிபதிகளும், வக்கீல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள் என்பர்.

இதேபோல் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் ஆகியோர் ஒரு முக்கோணத்தின் 3 பக்கங்களாக இருக்க வேண்டும். கோர்ட்டுக்கு சென்றால் விரைவான நீதி கிடைக்காது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மாண்பு கெட்டுவிடும். நீதிமன்றத்துக்கு வந்தால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அந்த நம்பிக்கையை நீடிக்க வைப்பது நமது கடமை ஆகும். இதற்கு நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான், பொதுமக்கள் எதிர்பார்க்கிற வலுவான, விரைவான, உறுதியான நீதி வழங்க முடியும்.

இவ்வாறுஅவர் பேசினார்.

முன்னதாக திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நம்பி வரவேற்றார். விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வேடசந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி வனிதா, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முத்துஇசக்கி, வக்கீல் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் பாலமுருகன், அரசு வக்கீல் சவடமுத்து ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story