குழந்தை கடத்தல் வதந்தியால் 5 பேர் அடித்து கொலை: முக்கிய குற்றவாளி கைது போலீஸ் விசாரணைக்கு பயந்து கிராமம் வெறிச்சோடியது


குழந்தை கடத்தல் வதந்தியால் 5 பேர் அடித்து கொலை: முக்கிய குற்றவாளி கைது போலீஸ் விசாரணைக்கு பயந்து கிராமம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 6 July 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை கடத்தல் வதந்தியால் 5 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

துலே, 

குழந்தை கடத்தல் வதந்தியால் 5 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்து பொதுமக்கள் தலைமறைவானதால் ரெயின்படா கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது.

குழந்தை கடத்தல் வதந்தி

மராட்டியத்தில் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. பல்வேறு இடங்களில் குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாத்து கொள்ளும்படியும் வதந்திகள் பரவின. இதனால் பொதுமக்கள் பெரும் பீதியுடன் காணப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் துலே மாவட்டம் ரெயின்படா கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாரச்சந்தை நடைபெற்ற போது அங்கு வந்த சிலரை குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக நினைத்த கிராம மக்கள், 5 பேரை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முக்கிய குற்றவாளி கைது

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர் . இதையடுத்து 23 பேரை முதல்கட்டமாக கைது செய்தனர். இந்தநிலையில் மகாரு பவார்(வயது22) என்பவர் மக்கள் கூட்டத்தை வழிநடத்தி தாக்குதலுக்கு தலைமை தாங்கி இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து நந்துர்பர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த மகாரு பவாரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதுதவிர குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தப்பிச்சென்ற மேலும் 22 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

போதை ஆசாமிகளால்...

இது தொடர்பாக கருத்து தெரிவித்த துலே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம்குமார், திடீரென ஏற்பட்ட தூண்டுதலால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையில் பங்கேற்றதாக தெரிவித்தார். கைதானவர் களிடம் நடத்திய விசாரணையில், கிராம மக்கள் சிலர் எதற்காக தாக்குகிறோம் என்றே தெரியாமல், உடன் இருந்தவர்களை பார்த்து தூண்டப்பட்டு இந்த கோர செயலில் ஈடுபட்டது தெரியவந்ததாக அவர் கூறினார்.

மேலும் கும்பல் மீதான தாக்குதலை முதலில் காகர்படா கிராமம் அருகே போதை ஆசாமிகள் சிலரே தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் போதை ஆசாமிகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ரெயின்படா வாரச்சந்தை நடைபெற்ற பகுதி வரை அந்த கும்பலை அடித்து இழுத்து வந்ததாகவும் அப்போது பிற பொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டதாகவும் போலீசார் கூறினர்.

கிராமம் வெறிச்சோடியது

இந்தநிலையில் போலீஸ் கைது நடவடிக்கைக்கு பயந்து பெரும்பாலான மக்கள் ரெயின்படாவில் இருந்து தலைமறைவாகினர். சுமார் 750 பேர் வசித்து வரும் ரெயின்படா கிராமத்தில் தற்போது வயதில் மூத்த கிராமவாசிகள் சிலர் மட்டுமே காணப்படு கிறார்கள்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரெயின்படா கிராம மக்கள், வாரச்சந்தைக்கு வந்திருந்த பிற கிராமத்து ஆட்களே பெருமளவில் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ஆனால் போலீசார் ரெயின்படா மக்களை கைது செய்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். கைது நடவடிக்கைக்கு பயந்து பெரும்பாலானோர் தலைமறைவாகி இருப்பதால் ரெயின்படா கிராமம் தற்போது ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story