பாப்பிரெட்டிப்பட்டி அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி கிணறு தோண்டிய போது பரிதாபம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணறு தோண்டிய போது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக கிணறு தோண்ட முடிவு செய்தார். இந்த பணியில் மெணசி ஜீவா நகரை சேர்ந்த தொழிலாளி ஜெயராமன் (வயது 53) என்பவர் தலைமையில் தொழிலாளர்கள் சந்திரன் (55), வேலாயுதம், அருள், குப்புசாமி, செல்வம், ஆனந்தன், முருகேசன் ஆகிய 8 பேரும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு சென்றனர். அவர்களில் ஜெயராமன், சந்திரன் உள்ளிட்ட 6 பேர் கிணற்றில் இறங்கி வேலை செய்து கொண்டு இருந்தனர். மற்ற 2 தொழிலாளர்கள் மேல் பகுதியில் கிரேன் இயக்குவது, மண்ணை எடுத்து கொட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றின் சுவரில் இருந்து திடீரென மண் சரிந்து உள்ளே விழுந்தது. இதில் சிக்கி தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டனர்.
இதை கண்டு கிணற்றின் மேல் பகுதியில் இருந்த 2 தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி பார்த்தனர். அப்போது ஜெயராமன், சந்திரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
மேலும் வேலாயுதம், அருள், குப்புசாமி, செல்வம் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் இறந்த ஜெயராமன், சந்திரன் ஆகிய 2 பேரின் உடல்களையும் கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு திரண்டு இருந்த அவர்களுடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் போலீசார், மண் சரிந்து விழுந்து இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிணறு தோண்டிய போது மண் சரிந்து விழுந்து ஒரே கிராமத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story