வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை முயற்சி மாமியார், நாத்தனார் மீது வழக்குப்பதிவு


வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை முயற்சி மாமியார், நாத்தனார் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 7 July 2018 4:15 AM IST (Updated: 7 July 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இது தொடர்பாக மாமியார், நாத்தனார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனார்.


கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள நல்லதங்காள் பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி மகாராணி (வயது 23). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஆனந்த குமார் வேலைக்காக வெளியூர் சென்று விடுவது வழக்கம். இந்நிலையில் மகாராணி தனது 2 குழந்தைகளுடன் மாமியார் செல்லக்கிளி (57), நாத்தனார் கவிதா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மகாராணியை, அவரது மாமியார் செல்லக்கிளி, நாத்தனார் கவிதா ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகாராணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக் குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதனால் மகாராணியின் உடல் முழுவதும் தீப்பிடித்தது.

இதனால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகாராணியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய மாமியார் செல்லக்கிளி, நாத்தனார் கவிதா ஆகிய 2 பேர் மீதும் கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story