தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்


தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
x
தினத்தந்தி 6 July 2018 9:30 PM GMT (Updated: 6 July 2018 7:22 PM GMT)

தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.

தூத்துக்குடி,

தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.

தண்ணீர் திறப்பு

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தின் கடைமடை பகுதியில் அமைந்து உள்ள ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைக்கட்டுகளின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

உடனடியாக ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைக்கட்டுகளின் கீழ் உள்ள 4 கால்வாய்களிலும் இன்று (அதாவது நேற்று) முதல் 4–8–18 வரையிலான காலத்துக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

போராட்டம்

தமிழக அரசு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எதை வைத்து கூறுகிறார்? என்று தெரியவில்லை. ஒருவேளை அவருடைய மாவட்டத்தில் அமைகிற துறைமுகம் பிரச்சினையை மட்டும் மையமாக வைத்து பேசுகிறார் என்றுதான் நினைக்கிறோம். இதுவரை தமிழகத்தில் 23 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து, அத்தனைக்கும் தீர்வு கண்ட அரசாக உள்ளது. உதாரணமாக, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது.

காவிரி பிரச்சினையில் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. பசுமை வழிச்சாலை பிரச்சினையில் கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து, அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி சுமுகமான முடிவு வந்து உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையும் நிரந்தரமாக மூடப்பட்டு உள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து உள்ளது.

உரிமை இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய உள்ள துறைமுகத்தை பொறுத்தவரை பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு எம்.பி.யாக உள்ளார். மத்திய மந்திரியாகவும் உள்ளார். அங்குள்ள மக்களிடம் ஒருமித்த கருத்தை கொண்டு வரும் கடமை அவருக்குத்தான் இருக்கிறது. அவர் அதனை செய்யும்போது, அரசு துறைமுகம் அமைவதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யும். தமிழக அரசு மக்களுக்கு பயன் அளிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் ஆதரிக்கிறது. அரசு தட்டிக்கழிக்கவில்லை. அவர் கடமையை செய்யாமல் கடமையை செய்யும் எங்களை பார்த்து குறை சொல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.


Next Story