மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் பகுதிகளில் வீடுகளில் திருடியவர் கைது; 27 பவுன் நகைகள் மீட்பு தாயாருக்கு வலைவீச்சு + "||" + Arrested for stealing homes in Thiruchendur areas 27 Pound jewels recovery Hunt for mother

திருச்செந்தூர் பகுதிகளில் வீடுகளில் திருடியவர் கைது; 27 பவுன் நகைகள் மீட்பு தாயாருக்கு வலைவீச்சு

திருச்செந்தூர் பகுதிகளில் வீடுகளில் திருடியவர் கைது; 27 பவுன் நகைகள் மீட்பு தாயாருக்கு வலைவீச்சு
திருச்செந்தூர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் புகுந்து திருடியவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் புகுந்து திருடியவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவருடைய தாயாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

27 பவுன் நகைகள் மீட்பு

திருச்செந்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு மேற்பார்வையில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கணபதி, போலீஸ்காரர்கள் சொர்ணராஜா, எழில் வளவன், இசக்கியப்பன், தங்கவேலு உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது, திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு தேரிச்சாமி கோவில் அருகில் பதுங்கி இருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு மேல தெருவைச் சேர்ந்த ரங்கசாமி மகன் பெரியசாமி (வயது 43) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பெரியசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

பல்வேறு திருட்டு சம்பவங்கள்

பெரியசாமி கடந்த 29–10–2017 அன்று திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கப்பல் என்ஜினீயரான கபிலனின் (35) வீட்டு கதவை உடைத்து 14½ பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் ஆகியவற்றை திருடி உள்ளார். மேலும் அதே நாளில் அதே பகுதியில் வேல் (62) என்பவரது வீட்டிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த வியாபாரி ராஜேஷ்குமார் (35) வீட்டில் ஒரு பவுன் கம்மல் ஜோடி, ரூ.20 ஆயிரம், கைக்கெடிகாரம் ஆகியவற்றை திருடி உள்ளார்.

பின்னர் பெரியசாமி கடந்த 9–12–2017 அன்று திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் மெடோனா தெருவைச் சேர்ந்த ஜேசய்யா மனைவி எல்ஜின் கட்டாரின் (76) வீட்டுக்குள் நுழைந்து, அவர் அணிந்து இருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றுள்ளார். அதன்பிறகு கடந்த 9–6–2018 அன்று ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சுரேஷ்குமாரின் (58) வீட்டில் 4½ பவுன் நகைகள், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை திருடி உள்ளார் என்று தெரியவந்து உள்ளது.

தாயாருக்கு வலைவீச்சு

கைதான பெரியசாமியை போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெரியசாமி மீது தட்டார்மடம், ஆறுமுகநேரி போலீஸ் நிலையங்களில் தலா ஒரு கொலை வழக்கு மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர் ஏற்கனவே சிறையில் இருந்து விட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து, பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்.

பெரியசாமி திருடிய நகை, பணத்தை தன்னுடைய தாயார் சித்திரை புஷ்பத்திடம் (60) கொடுத்து உள்ளார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.