26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர் களுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கடந்த 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கணினி உதவி யாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி இளநிலை உதவியாளராக பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றிய அலு வலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர் களும், 589 ஊராட்சிகளில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1,024 அலுவலர்களில் 677 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்றுமதியம் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தஞ்சை தெற்கு வட்ட துணை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி, வட்ட செயலாளர்கள் பாஸ்கரன், சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story