திருச்சி ஜங்ஷனில் தொடரும் சம்பவங்கள்: ரெயில் மாறி ஏறிய பெண் பயணி கீழே விழுந்து படுகாயம்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அடிக்கடி ரெயில் மாறி ஏறி பயணிகள் தவிக்கும் சம்பவம் நடக்கிறது. இதே போன்று நேற்று ரெயில் மாறி ஏறிய பெண் பயணி ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
திருச்சி,
திருச்சி அருகே பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சையது லத்தீஸ் அகமதுவின் மனைவி சாலியாபீவி (வயது49). இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் சென்னை செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தார். அப்போது முதலாவது நடைமேடையில் எர்ணாகுளம்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்தது. அந்த ரெயில் சென்னை செல்வதாக கருதி சாலியாபீவி முதலில் ஏறினார். அப்போது ரெயில் புறப்பட தொடங்கியது.
இதற்கிடையில் ரெயில் சென்னை செல்லக்கூடியதல்ல என உடன் வந்தவர்கள் தெரிவித்த போது அவர் ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்போது கால் இடறி தவறி நடைமேடையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.
ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற போது நடைமேடையில் விழுந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. நடைமேடையில் ஒரு ரெயில் நிற்கும் போது அதன் விவரம் குறித்து ஒலிபெருக்கியில் தொடர்ந்து முறையாக அறிவிப்பதில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், “ரெயில் நிலையத்திற்குள் ரெயில் வரும் போது ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படுகிறது. அதன்பிறகு ரெயில் புறப்பட்டு செல்லும் போது அறிவிக்கப்படுகிறது. ரெயில் நடைமேடையில் நிற்கும் போது அந்த ரெயில் எந்த ஊருக்கு செல்ல உள்ளது என்பதையும் ஒலிபெருக்கியில் சில நிமிடங்கள் அறிவிக்க வேண்டும். அப்போது தான் பயணிகள் கவனித்து ரெயிலில் ஏற முடியும்” என்றனர். ரெயிலில் ஏறுவதற்கு முன்பு எந்த ஊருக்கு அந்த ரெயில் செல்கிறது என்பதை உறுதிப்படுத்திய பின்பு பயணிகள் அதில் பயணிக்க வேண்டும். அவசரப்பட்டு ஏறியபின் அதில் இருந்து இறங்க முயற்சிக்கும் போது தவறி விழுவதை தவிர்க்க பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ரெயில்வே தரப்பில் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story