பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நெல்லையில் 2 இடங்களில் நடந்தது
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நெல்லையில் 2 இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நெல்லையில் 2 இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு பொது விநியோக ஊழியர்கள் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் செல்லம், பொருளாளர் செல்வன், துணை தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் பால்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பிறதுறைகளில் கடை பிடிப்பது போல்...பொது விநியோக திட்டத்தில் அரசின் பிறதுறைகளில் கடைபிடிப்பது போல் பிளஸ்–2 கல்வி தகுதி உடைய விற்பனையாளர்களுக்கு உதவியாளர் நிலையிலும், எஸ்.எஸ்.எல்.சி. தகுதி உடைய எடையாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையிலும் ஊதியம் வழங்க வேண்டும்.
அரிசி, கோதுமை மற்றும் பொதுவிநியோக பொருட்கள் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், பச்சரிசியை குறைத்து கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும்.
புதிய பென்சன் திட்டம்புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 20 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி வழங்க வேண்டும், பொதுவிநியோகத்துக்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திரளான ரேஷன்கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டையில்...இதேபோன்று, தமிழ்நாடு கூட்டு நியாயவிலைக்கடை கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச. பேரவை அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார்.
கண்ணன், முகமது சைபுதீன், பிரேமானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், எடை குறையாமல் இருக்க பாக்கெட் முறையில் பொருட்களை வழங்க வேண்டும், ரேஷன்கடை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அய்யப்பன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான ரேஷன்கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.