மகேந்திரா சிட்டியில் நிலநடுக்க பீதி பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் வெளியே ஓடினர்


மகேந்திரா சிட்டியில் நிலநடுக்க பீதி பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் வெளியே ஓடினர்
x
தினத்தந்தி 7 July 2018 4:15 AM IST (Updated: 7 July 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மகேந்திரா சிட்டியில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

செங்கல்பட்டு, 

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டியில் 63 பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உள்ளன. அங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு நேற்று மாலை 5 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது போல ஒரு அதிர்வு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்து விட்டனர்.

வெளியே வந்த ஊழியர்கள்

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டபோது, “டமார் என்ற பயங்கர சத்ததத்துடன் ஒரு அதிர்வு ஏற்பட்டது. இதனால் நாங்கள் அனைவரும் எங்களது இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து விட்டோம். நிலநடுக்கம் ஏற்பட்டது போல அனைத்து பொருட்களும் ஒரே நேரத்தில் அதிர்ந்ததால் நாங்கள் பயந்து வெளியே வந்து விட்டோம்” என்று தெரிவித்தனர்.

போலீஸ் விளக்கம்

போலீஸ் தரப்பில், “மகேந்திரா சிட்டியை ஒட்டி காட்டுப்பகுதி உள்ளது. அதற்கு கிழக்கு திசையில் அதாவது மறைமலை நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட (அனுமந்தபுரம் காட்டுப்பகுதியில்) தமிழக போலீசாரின் துப்பாக்கி சூடு தளம் உள்ளது. அங்கு அடிக்கடி ராணுவ வீரர்கள் அதிக சக்திவாய்ந்த வெடி பொருட்களான வானத்தில் இரவு நேரத்தில் கலர் கலராக மிளிரும் பலுன்களை பறக்கவிட்டு அதனை குறி பார்த்து சுடுவதும், பீரங்கி குண்டுகளை வெடிக்க வைத்து பயிற்சி எடுப்பதும் வாடிக்கை. அதுபோல நேற்று மாலையும் ஒரு சக்திவாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று வெடித்ததால் இந்த அதிர்வு ஏற்பட்டது” என்று கூறினர்.

இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட பாரேரி கிராமத்தில் ஒரு சில வீடுகளில் இதுபோன்ற அதிர்வுகள் ஏற்பட்டதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். 

Next Story